கோவிலுக்குள் நுழைந்த சிறுவன் சுட்டுக் கொலை..!! சாதி வெறியால் நிகழ்ந்த கொடூரம்..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 10, 2020, 11:08 AM IST
Highlights

கொரோனா ஏற்படுத்திவரும் உயிர் பலியால் ஒட்டுமொத்த இந்தியாவும் உறைந்து கிடக்கும் நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஏற்படுத்திவரும் உயிர் பலியால் ஒட்டுமொத்த இந்தியாவும் உறைந்து கிடக்கும் நிலையில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி வெறியால் இக்கொடூரம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது, மக்கள் கொத்துக் கொத்தாக வைரசுக்கு மடிந்து வருகின்றனர். வேற்றுமைகள் மறந்து மனிதகுலம் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியுமென உலகச் சுகாதார நிறுவனம் அறைகூவல் விடுத்துள்ளது. பசி, பட்டினியால் தவிக்கும் சக மனிதர்களுக்கு ஆங்காங்கே உதவிக் கரங்கள் நீண்டு மனிதநேயம் துளிர்விட தொடங்கியுள்ள நிலையில்  இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதிவெறி கொடுமையால் காட்டுமிராண்டிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோயிலுக்குள் நுழைந்து சாமி  தரிசனம் செய்ததற்காக பட்டியலின சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் இவரது மகன்  விகாஸ் குமார் ஜாதவ் (17) ஊரடங்கு தளர்த்தப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூன் -1 ஆம் தேதி  அங்குள்ள சிவன் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட முயன்றுள்ளார் விகாஸ், அப்போது அங்கிருந்த மற்ற சமூகத்தினர் விகாஸை தடுத்ததாக தெரிகிறது, ஆனால் அதையெல்லாம் மீறி அவன் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி கோவிலுக்குள் வந்து சாமி தரிசனம் செய்ய முடியும் எனக்கூறி விகாஸை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, காலையில் வீட்டிற்குள் திடீரென நுழைந்த நான்கு இளைஞர்கள் விகாஸ் வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர், இதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்று கூடி போராட்டம் நடத்தியதன் விளைவாக போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த விவகாரம் குறித்து எந்த சமூக அமைப்போ அரசியல் தலைவர்களும் வாய் திறக்கவில்லை,  கோவிலுக்கு சென்றதற்காக ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. சாதி வெறி நோக்கத்தோடு சிறுவனை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

 

click me!