
உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் தவறான தகவல்களை பாஜக தருவதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் கூறியுள்ளனர். இந்த முடிவுகளின் சரியான நிலை குறித்து தெளிவாக ஊடகங்களும் பத்திரிகைகளும் கூட எடுத்துரைக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியது. 2012ம் ஆண்டு 12 என இருந்த வெற்றி, தற்போது அதிகரித்திருப்பதாகவும் மற்ற பதவிகளுக்கான தேர்தல்களிலும் மாபெரும் வெற்றி கிடைத்திருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் மாநகராட்சி, நகராட்சி, நகர பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளுக்கான தேர்தல் கணக்கில் எடுக்கப்படவில்லை எனவும், ஒரு குறிப்பிட்ட பதவிகளுக்கானதை வைத்து பாஜக தன்னைத்தானே மார்தட்டிக் கொள்வதாகவும் உத்தரப் பிரதேச காங்கிரஸார் புகார் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ்யசபா உறுப்பினர் தீபக்சிங் கூறும்போது, உள்ளாட்சி அமைப்பின் அனைத்து பதவிகளுக்கான தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. இதை மறைத்து தாம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக மார்தட்டி கொள்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு 90% வாக்குகள் கிடைத்தன. இது அடுத்து வந்த சட்டப்பேரவையில் 70% குறைந்தது. ஆனால், தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 27% வாக்குகளை மட்டுமே பாஜக பெற்றுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட அதிகமாகக் கிடைத்த 10% வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளன என்றார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தீபக்சிங் உள்ளாட்சி தேர்தலின் சில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளார். இதன்படி, 5217 நகரசபை தலைவருக்கான முடிவுகளில், 125ல் தோல்வியடைந்த பாஜக, வெறும் 68ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நகரசபைகளின் உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலில் 914-ல் வெற்றியும், 4303-ல் தோல்வியும் பாஜக அடைந்திருக்கிறது. இதேபோல், நகர பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 100-ல் வெற்றி பெற்று 337-ல் தோல்வியை சந்தித்துள்ளது. நகர பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கானதில் 4728-ல் தோல்வியும் 662-ல் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என தீபக் சிங் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளையும் குறிப்பிடாமல் பாஜக அதிகம் வெற்றிபெற்ற மேயர் பதவியை மட்டும் ஊடகங்கள் பெரிதாகக் காட்டியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட அதிகமாகக் கிடைத்த 10% வாக்குகளை ஊடகங்கள் கணக்கில் எடுக்காமல் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்துவிட்டதாக கூறுகின்றன என்று தீபக் சிங் சாடினார்.