
கடந்த ஜனவரி மாதம் டீ-ஆக்டிவேட் ஆன விஷாலின் ட்விட்டர் கணக்கு நேற்று இரவு மீண்டும் ஆக்டிவேட் ஆகி ப்ரொபைல் போட்டோ, வால்பேப்பர் என ஆர்.கே.நகருக்காக களைகட்டுகிறது விஷாலின் ட்விட்டர் அக்கவுண்ட்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக விஷால் களமிறங்குகிறார். இதன் மூலம் விஷால் அதிகாரப்பூர்வமாக அரசியலில் குதித்துவிட்டார். ஜெ. மறைவால் காலியான ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி, இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன், கடந்தமுறை அதிமுக சார்பில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், திமுக சார்பில் மருதுகணேஷ் என ஏற்கனவே ஒரு பட்டாளம் காலத்தில் தீயாக வேலை செய்துகொண்டிருக்கும் வேலையில் தாம் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக நடிகர் விஷால் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆண்டவர் கமல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என இரு ஜாம்பவான்கள் அதோ இதோ என அலட்டி கொண்டிருக்கையில் விஷால் அரசியல்வாதியாகவே மாறிவிட்டார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பயன்பாட்டில் இல்லாமல் டீ-ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்த விஷாலின் ட்விட்டர் கணக்கு நேற்று இரவு மீண்டும் ஆக்டிவேட் ஆகியுள்ளது. மேலே இருக்கும் படத்தை புதிய ப்ரொஃபைல் பிக்சராக மாற்றியிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதால் ஏற்பட்ட எதிர்ப்பால் நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் விஷால் ஆகிய இருவரும் ட்விட்டரிலிருந்து அதிரடியாக விலகினார்கள். அவர்களது அக்கவுண்ட் டீ-ஆக்டிவேட் ஆகி சுமார் 10 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த கையோடு ட்விட்டரிலும் லாக்-இன் செய்திருக்கிறார் புரட்சி தளபதி.
ஐடி டீ-ஆக்டிவேட் ஆனதிலிருந்து தனது தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுன்ட்டிலேயே தகவல்களைப் பகிர்ந்துவந்தார் விஷால். நடிகர்கள் சங்கப் பொறுப்பை தனியாகவும், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்ற பொறுப்பை தனியாகவும் தொடர்ந்துவந்த விஷால், தற்போதைய அரசியல் என்ட்ரியை தனது சொந்த பெயரிலேயே தொடங்கவுள்ளார்.