
ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் நேரில் பார்வையிட்டு மீட்புப்பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, புயலின் வேகம் கடுமையாக இருந்ததால் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றால் சுமார் 3600 மின் கம்பங்கள் சாய்ந்தன. அதனால் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது.
ஓகி புயல் தீவிரமடைந்ததுமே வருவாய்த்துறை அமைச்சரும் மின்சாரத்துறை அமைச்சரும் உடனடியாக குமரி மாவட்டத்திற்கு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை தொடங்கிவிட்டனர். வருவாய்த்துறை, மின்சாரத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகள் இணைந்து பணிபுரிவதால் நிலைமை சீரடைந்து வருகிறது.
அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தபொது மரங்கள் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது தெரியவந்தது. ஆனால், அவையெல்லாம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கும் வாழை, நெல் ஆகிய பயிர்கள் புயலால் சேதமடைந்துள்ளன. மீனவர்கள் படகுகளை இழந்துள்ளனர். ஓகி புயலால் குமரி மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பான கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக உரிய இழப்பீடு வழங்கப்படும்.
ஓகி புயல் குறித்த அறிவிப்பால், தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் புயலுக்குப் பிறகு மேற்கொண்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளாலும் உயிர்ச்சேதம் பெருமளவு குறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் 205 படகுகளும் 2384 மீனவர்களும் இதர மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களை தொடர்புகொண்டு குழுக்களை அனுப்பி மீட்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.