வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வாங்கி கட்டும் ”மாண்புமிகு”கள்..! வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

First Published Dec 3, 2017, 3:41 PM IST
Highlights
ministers wrong speech criticize


ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை வாய் திறக்காத அமைச்சர்கள், அவர் இறந்தபிறகு, வாய்க்கு வருவதை எல்லாம் பேசிவருகின்றனர்.

தெர்மாகோலை வைத்து வைகை ஆற்று நீரை ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ முயன்றதில் தொடங்கிய காமெடி இன்னும் நின்றபாடில்லை.

வாய்க்கு வருவதை எல்லாம் பேசுவதில், முன்னோடிகளாக திகழ்பவர்கள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும் செல்லூர் ராஜுவும் தான். 

செல்லூர் ராஜூ:

மதுரையில் வைகை ஆற்று நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோலால் தடுக்க முயன்றதன் மூலம் உலக அளவிலேயே செல்லூர் ராஜூ பிரபலமானார் என்றே கூறலாம். அதையடுத்து டெங்குவினால் யாருமே உயிரிழக்கவில்லை என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். பின்னர், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவின் உதவியோடுதான் அதிமுக ஆட்சி அமைந்தது என கூறினார். இதையடுத்து தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல் செல்லூர் ராஜூதான் என்ற கருத்து எழுந்ததை அடுத்து, நான் ஸ்லீப்பர் செல் இல்லை என கண்ணீர் விட்டு கதறினார். 

இவையனைத்தையும் மிஞ்சும் அளவிற்கு உச்சபட்சமாக, மதுசூதனனை முன்னாள் முதல்வர் என தெரிவித்தார். செல்லூர் ராஜூவின் இந்த பேச்சு, மற்ற அமைச்சர்களிடையேயும் கட்சி நிர்வாகிகளிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சுகளையும் செயல்களையும் நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்தனர்.

திண்டுக்கல் சீனிவாசன்:

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றபோது இட்லி சாப்பிட்டார். நலமாக இருக்கிறார் என அமைச்சர்கள் பேசியிருந்தனர். ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்து சசிகலாவையும் தினகரனையும் ஓரங்கட்டியபிறகு, அப்படியே அந்தர் பல்டி அடித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சொன்னதைத்தான் ஊடகங்களிடம் கூறினோமே தவிர, அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அந்தர் பல்டி கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதன்பிறகு, டெங்குவால் மக்கள் உயிரிழந்து கொண்டிருந்த வேளையில், டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்தார். இந்த கருத்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதன்பிறகு, மற்றொரு மேடையில் பிரதமர் மோடி என குறிப்பிடுவதற்குப் பதிலாக பிரதமர் மன்மோகன் சிங் என கூறினார். இதை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விட்டனர்.

மற்றொரு மேடையில், கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதனை, மேடையில் வைத்தே ஏம்மா.. நீ பரதநாட்டியம் ஆடுற பொண்ணா..? என கேட்டு பின்னர் பாடகர் என்றார். இதை வைத்தும் நெட்டிசன்கள், போதும் போதும் என்கிற அளவுக்கு மீம்ஸ்களை தட்டிவிட்டனர்.

பன்னீர்செல்வம், செங்கோட்டையன்:

அதே மேடையில், சுதா ரகுநாதன் என்ற பெயரை அமைச்சர் செங்கோட்டையன் ”சுதா ரகுராம்” என்று பொறுமையாக படித்து சொன்னார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வமோ, ஒருபடி மேலே போய், சுதா ரங்குநாதன் என்றார். அந்த பெயரை சுதா ரகுநாதன் வெறுக்குமளவுக்கு வச்சு செஞ்சாங்க நம்ம அமைச்சர் பெருமக்கள். பெயரைக் கூட சரியாக சொல்ல தெரியவில்லை என கிண்டலுக்கு ஆளானார்கள்.

கருப்பண்ணன்:

திருப்பூரில் நொய்யல் ஆறு நுரையாக ஓடியபோது, அப்பகுதிவாழ் மக்கள், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது, அமைச்சர் கருப்பண்ணன் சொன்னாரே ஒரு விளக்கம். யாராலும் எப்போதும் மறக்க முடியாத விளக்கம் அது. மக்கள் சோப்பு போட்டு குளிக்கும் நீர் கலந்ததால் நொய்யல் ஆற்றில் நுரை காணப்படுகிறது என்றார். சாதாரண மேட்டர் கிடைத்தாலே வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இதை மட்டும் விட்டு வச்சுடுவாங்களா என்ன..? 

அதன்பிறகு மக்கள் டெங்குவால் உயிரிழந்துகொண்டிருந்தபோது, திருப்பதியில் தரிசனம் செய்த கருப்பண்ணன், ஏழுமலையான் புண்ணியத்தில் தமிழக மக்கள் ஒரு குறையுமின்றி நலமாக உள்ளனர் என்றார். ஏழுமலையான் புண்ணியம்லாம் இருக்கட்டும்.. உங்களுக்கு ஓட்டு போட்டதுக்கு நீங்க என்ன பண்ணீங்க? என்றும் நாங்க(மக்கள்) உங்களுக்கு ஓட்டு போட்டோமா? இல்ல ஏழுமலையானுக்கு ஓட்டு போட்டோமா? என்ற கேள்வியும் எழுந்தது.

கருப்பண்ணனின் இந்த கருத்தும் கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது.

எஸ்.பி.வேலுமணி: 

தன் பங்குக்கு அமைச்சர் வேலுமணி, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை எல்லாம் விட தமிழகத்தில் மழைநீர் வடிகால் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

முதல்வர் பழனிசாமி:

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களில் கதைகளை கூட கதையை மாதிரி சொல்லாமல், பார்த்தே படிக்கும் முதல்வர் பழனிசாமி அவர்கள், கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்று சொல்லிவிட்டார். கம்பராமாயணம் என்பதிலேயே கம்பர் என்று அதை எழுதியவரின் பெயர் வந்துவிட்ட நிலையில், முதல்வர் சேக்கிழார் என கூறியதும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

எட்டு கால் பூச்சிக்கு எத்தனை கால் என்று கேட்டால் அதற்குக்கூட தவறாக பதில் சொல்லுவது போல, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று சொன்னது கடும் கிண்டலுக்கு ஆளானது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்:

ஆட்சியாளர்கள்தான் பதற்றத்தில் என்ன சொல்வது என்று தெரியாமல் வாய்க்கு வருவதை எல்லாம் பேசுகிறார்கள் என்றால்(அதற்காக அவை நியாயப்படுத்தப்படவில்லை) எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தன் பங்கிற்கு, அவரும் கன்ஃபியூஸ் ஆயிடுறார்.

நெல்லையில் நடந்த விழா ஒன்றில் பேசிய ஸ்டாலின், குடியரசு தினம் ஜனவரி 25..  இல்ல டிசம்பர் 25.. இல்ல இல்ல ஜனவரி 26 என மாறி மாறி பேசி விமர்சனத்துக்கு உள்ளானார்.

ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும் மேடைகளில் புலம்புவதைப் பார்த்தால், ஒருவேளை எழுதிக்கொடுத்தவர்கள் தவறாக எழுதிக்கொடுத்துவிட்டார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

நண்பன் திரைப்படத்தில், அர்த்தமே தெரியாமல், தனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டதை மேடையில் பேசி சத்யன் அசிங்கப்படும் நிகழ்வும் கண்முன் வந்துசெல்கிறது.
 

click me!