மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்தது தமிழக அரசு - இஸ்லாமிய மக்கள் முதல்வருக்கு நன்றி

By Asianet TamilFirst Published Mar 2, 2021, 7:19 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள உருது மொழி பேசும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தமிழ்நாடு மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு உருது மொழி பேசும் இஸ்லாமிய மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தில் உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் மொழிவாரி சிறுபான்மையினராக உள்ளனர். உருது மொழியை வளர்க்கும் விதமாகவும் சிறுபான்மையினர் நலன் காத்திடும் வகையிலும்,  தமிழ்நாடு மாநில உருது மொழி கழகத்தை மாற்றியமைத்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த கழகத்தின் தலைவராகவும், டாக்டர்.முகமது நயீமுர் ரகுமான் (முன்னாள் தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் & தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனம், சிறுபான்மையினர் நல அமைச்சகம், இந்திய அரசு) மற்றும் டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக இயக்குனர், தமிழ்நாடு உருது கழகத்தின் துணைத் தலைவராகவும் இருப்பார்கள். 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கல்வியாளர்கள், உருது புலவர்கள், கவிஞர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் உயர்கல்வித்துறை, நிதி துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர்கள், தமிழ்நாடு மாநில உருது மொழி கழகத்தின் முன்னாள் பதிவாளர், ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாநில உருது மொழி கழகம் மாற்றி அமைத்துள்ளதற்கு உருது மொழி பேசும் இஸ்லாமியர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர். 

சிறுபான்மை மக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

click me!