
தமிழகத்தில் ராகுல் காந்தி இரண்டு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டார். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி காமராஜரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அவரது ஆட்சியை மீண்டும் மலர செய்வதற்கான முயற்சியை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதை சுட்டி காட்டினார்.
ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசினார். புது வகையான பிரச்சார யுக்திகளையும் மேற்கொண்டார். ராகுல் காந்தியின் பிரச்சாரம் அவரை முன் நிறுத்தியே அமைந்தது, கூட்டணி கட்சிகள் அல்லது தலைவர்களின் பங்கெடுப்புகள் ஏதும் இன்றியே அமைந்தது.
ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் தி.மு.கவை குறித்தோ ஸ்டாலின் குறித்தோ எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சி தி.மு.கவுடனான தொகுதி பங்கீடு பேச்சு வாரத்தையில் வேண்டிய இடங்களை பெற அழுத்தம் கொடுப்பதற்கும் ராகுல் காந்தியின் பிரச்சாரம் வழி வகுத்துள்ளது. கூட்டணியில் வேண்டிய இடங்கள் கிடைக்காத நிலையில் தனித்து நின்று தனது பலத்தை நிரூபிக்கவும் காங்கிரஸ் கட்சி தயாராக இருப்பதை ராகுல் காந்தியின் பிரச்சாரமும் காங்கிரஸ் கட்சியின் நகர்வுகளும் காட்டுகின்றன.
ராகுல் காந்தியின் பிரச்சார யுக்திகளும் இதனை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேசிய அளவில் மாற்றங்களை கொண்டு வர தமிழக தேர்தல் களத்தை தேர்வு செய்து ராகுல் காந்தி பிரச்சார யுக்திகளை வகுதுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ராகுலின் பிரச்சார யுக்திகள் மற்றும் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸின் நிலைப்பாடு ஆகியவை காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற தேர்தலில் தனித்து களம் கான தயாராக இருப்பதையே உணர்த்துகிறது. இது தேசிய அளவில் காங்கிரஸ்க்கு கைகொடுக்கும் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நம்புகின்றனர்.