தயார் நிலையில் பாமக.. காத்திருக்கும் திமுக..பதுங்கும் அதிமுக.. சூடுபிடித்த "தேர்தல்" களம் !!

By Raghupati RFirst Published Jan 28, 2022, 12:06 PM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக  கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. அந்த கூட்டணியில் இருந்த பாமக வெளியேறி விட்டது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று தெரிகிறது. 

இது தவிர தே.மு.தி.க, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிடுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை இன்று தொடங்கி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழக காங்கரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் தனித்தனியே இன்று ஆலோசனை மேற்கொள்கிறது. 

கூட்டணி, பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் குறித்து அதிமுக மற்றும் பாஜக ஆலோசனை நடத்துகிறது. இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியினருக்கு கடிதம் ஒன்றினை எழுதியிருக்கிறார். அதில்,’நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, ஐந்தரை ஆண்டுகள் தாமதப்படுத்திய தேர்தல் ஆணையம், வேட்புமனு தாக்கலுக்கு முன், ஐந்து நாட்கள் கூட அவகாசம் அளிக்க மறுக்கிறது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. மாநிலத் தேர்தல் ஆணையம், எப்போதுமே தமிழகத்தை ஆளும் கட்சிக்கு கைப்பாவையாக தான் செயல்படும்.

இவற்றை எல்லாம் சமாளித்து தான் வெற்றிகளை குவித்தாக வேண்டும். அனைத்து பதவிகளுக்கும் தகுதியான, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை விருப்பு, வெறுப்பின்றி, மாவட்ட செயலர்களும், பார்வையாளர்களும் தேர்வு செய்ய வேண்டும். அதுவே பாதி வெற்றியை உறுதி செய் யும். தமிழகத்தில் மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற உள்ளன. மாம்பழம் சின்னத்தில் தகுதியான வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். வேட்பாளர் பட்டியலை ஓரிரு நாட்களில் தயாரிக்க வேண்டும்’ என்று  ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வந்தது. மேலும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து இருக்கிறார். ஆக மொத்தம் இந்த தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

click me!