
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என அமைச்சர் கே.என். நேரு தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு நகர நல்வாழ்வு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை விரைவில் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
புதிய நகராட்சி, மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதால் வார்டு வரையறை பணிகள் செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. வார்டு வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் முடிவைப் பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அரசின் நிதி நிலைமையைக் கணக்கில் கொண்டு பணிப் பாதுகாப்புக் கோரி தொடர்ந்து போராடி வரும் மாநகராட்சியின் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்படும் எனவும் கூறினார்.