அவருதான் எங்களை வழிநடத்தணும்... பிரியங்காவை டார்கெட் செய்யும் காங்கிரஸார்!

By Asianet TamilFirst Published Jun 14, 2019, 6:41 AM IST
Highlights

பிரியங்காவின் இந்த அதிரடியைப் பார்த்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிரண்டுபோனார்கள். ஆனால், இதுபோன்ற கண்டிப்பான தலைமை இருந்தால்தான், கட்சியைப் பலப்பத்த முடியும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். எனவே, அவரை உ.பி. முதல்வர் வேட்பாளராக்க அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸார் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.
 

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்காவை முன்னிறுத்த வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக உ.பி. கிழக்கு பகுதி பொதுச் செயலாளராக பிரியங்கா நிறுத்தப்பட்டார். உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியாக காங்கிரஸ் தலைமை பிரியங்காவை அனுப்பியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பாரம்பரிய தொகுதியான அமேதியில் கூட காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.
 உ.பி.யில் தொடர்ச்சியாக பாஜக ஆதிக்கம் செலுத்திவருகிறது. அந்த மாநிலத்தில் 2022-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு இப்போதிருந்தே கட்சியைப் பலப்பத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் உ.பி.யில் ரேபரலி தொகுதியில் சோனியாவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சோனியாவுடன் பிரியங்கா வந்திருந்தார். அப்போது பிரியங்காவைச் சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகளையும் தொண்டர்களிடம் தேர்தல் தோல்வி குறித்து காரணம் கேட்டார். மேலும் அவர்களை கண்டித்தார்.

 
அதற்கு முன்பாக கட்சியினருடனான கூட்டம் நடைபெறும் இடத்துக்கு 40 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்து, தொண்டர்களிடம் காரணங்களை பிரியங்கா கேட்கத் தொடங்கினார். அதன்பிறகே கட்சி நிர்வாகிகள் வந்தனர். பிரியங்காவின் இந்த அதிரடியைப் பார்த்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மிரண்டுபோனார்கள். ஆனால், இதுபோன்ற கண்டிப்பான தலைமை இருந்தால்தான், கட்சியைப் பலப்பத்த முடியும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். எனவே, அவரை உ.பி. முதல்வர் வேட்பாளராக்க அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸார் கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.


 அவருடைய வழிகாட்டுதல் உ.பி.யில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த உதவும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்களும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே உ.பி.யில் காலியாக உள்ள 11 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்யும் அதிகாரத்தை பிரியங்காவிடம் கட்சி தலைமை வழங்கியிருப்பதாகவும் தெரிகிறது. இதுபோன்ற காரணங்களால் பிரியங்காவை 2022-ல் உ.பி. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளது. 

click me!