அவதூறு பரப்புனா சும்மா இருக்க மாட்டோம் ! ராமதாசுக்கு எச்சரிக்கை விடுத்த திருமா !! வழக்கு தொடர முடிவு !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 9:08 PM IST
Highlights

விடுதலைச் சிறுத்தைகன் கட்சி மீது தொடர்ந்து பாமக ராமதாஸ் அவதூறு பரப்பி வருவதால் அவருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த குறவன்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் மகள் ராதிகா குறித்து அவரது முகநூல் பக்கத்தில் அதே ஊரைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தவறாக பதிவிட்டதால்  மனமுடைந்த ராதிகா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்தச் செய்தி அறிந்து ராதிகாவை திருமணம் செய்துகொள்ள இருந்த விக்னேஷ் என்பரும்  தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், விக்னேஷ் கொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ராதிகா, விக்னேஷ் மரணத்திற்குக் காரணம் விசிகவைச் சேர்ந்த நிர்வாகி என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று அறிக்கை வெளியிட்ட விசிக தலைவர் திருமாவளவன், ராதிகா தற்கொலை விவகாரத்தில் பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் அவரது உறவினர் வல்லரசு ஆகியோரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவல் துறை கைது செய்துள்ளது. 

காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினரின் நடவடிக்கைகளில் விடுதலைச்சிறுத்தைகள் எந்தவகையிலும் தலையிடவில்லை. 

ஆனால், பிரேம்குமார் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதாலேயே, இந்த துயரச்சாவுகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம்போல மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பும் சதி முயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ அல்லது தனிப்பட்ட இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும்? திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழிசுமத்துவது எந்தவகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், சாதியின் பெயரால் மோதலைத் தூண்டிவிட்டு, சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துவதும்தான் பாமகவின் திட்டமிட்ட சதிநோக்கமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளோடு வேண்டுமென்றே விடுதலைச்சிறுத்தைகளைத் தொடர்புப்படுத்தி ஆதாரமற்ற வகையில் அபாண்டமாக பழிசுமத்தித் தொடர்ச்சியாக அவதூறு பரப்பிவருவது பாமக ராமதாஸ் அவர்களின் வாடிக்கையாக உள்ளது. 

இது தலித்துகளுக்கு எதிரான சாதி வெறியாட்டத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டவர், இந்தப் பெருந்தீங்கிலிருந்து சமூகநல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் ராமதாஸ் மீது விரைவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

click me!