
கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் பின்னிரவை ‘ஆன் தி ஈவ் ஆஃப கிறிஸ்துமஸ்’ என்பார்கள். தேவாலய ஆராதனைகள், சாண்டகிளாஸின் நடனங்கள் என்று அமர்க்களப்படும் அந்த இரவு. ஆனால் ‘ஆன் தி ஈவ் ஆஃப் 2ஜி கேஸ் ஜட்ஜ்மெண்ட்’ இப்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. உறைந்து நிற்கிறது இப்போது. ஒவ்வொரு நொடியும் முள் மேல் பாதம் போல வலிக்க வலிக்க அழுந்துவதுதான் கொடுமையிலும் கொடுமை....
தி.மு.க. தன் வாழ்வில் எத்தனையோ இடை தேர்தல்களை சந்தித்திருக்கிறது. ஆனால் இரண்டு இடை தேர்தல்கள் அதற்கு என்றென்றும் மறக்க முடியாதவை ஆகியிருக்கின்றன.
ஒன்று, ’திருமங்கலம் ஃபார்மூலா’ என்று தேசமே கிண்டலடிக்கும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வழக்கம் உருவான தேர்தல். தி.மு.க. ஆட்சியிலிருந்த 2009-ல் திருமங்கலத்தில் நடந்த இந்த தேர்தலின்போதுதான் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை அழகிரி துவக்கினார் என்பார்கள்.
இன்று தேசிய வியாதியாகி போயிருக்கும் இந்த வழக்கத்தை தேசத்தின் எந்த மூலையில் அரசியல்வாதிகள் கிண்டலடித்தாலும் அதன் தாக்கம் தி.மு.க.வில் முடிவடைகிறது. ஆக இந்த இடைத்தேர்தலை தி.மு.க.வின் வரலாறு மறக்காது.
அதேபோல் 2017 டிசம்பர் 21-ல் சென்னை ஆர்.கே.நகரில் நடக்கும் இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நாளினையும் தி.மு.க. மறக்காது. காரணம், இந்த நாளில்தான் தி.மு.க.வின் ஆணி வேரை அசைத்துப் பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. ஆர்.கே.நகரில் தி.மு.க. ஜெயிக்கிறது, ஜெயிக்காமல் போகிறது அல்லது 3வது இடத்துக்கு தள்ளப்படுகிறது! இதெல்லாம் அக்கட்சிக்கு ஒரு விஷயமேயில்லை. ஆனால் 2ஜி தீர்ப்பானது தேசிய அளவில் அதன் இமேஜை திருத்தி எழுதப்போகும் செயலல்லவா?!
2ஜி வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக சி.பி.ஐ. சுட்டிக்காட்டியிருப்பது ராசா மற்றும் கனிமொழியை.
தீர்ப்பு தி.மு.க.வுக்கு சாதகமாக வந்தால் அதன் வாழ்க்கை இனி ராஜவாழ்க்கையாக அமையும் வாய்ப்பு அதிகம். காரணம், ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அ.தி.மு.க. சரிந்து கிடப்பதால் இனி தி.மு.க.வுக்கே அடுத்த வாய்ப்பு என்கிறார்கள்.
தேசிய அளவில் தி.மு.க.வுக்கு உள்ள மிகப்பெரிய அவப்பெயர் இந்த 2ஜி வழக்குதான். அதிலிருந்தும் விடுபட்டுவிட்டால் அக்கட்சிக்கு பெரிய பலம் கூடும்.மேலும் நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஆர்.கே.நகரில் வாக்கு எண்ணிக்கை சூடு பிடிக்க துவங்கியிருக்கும். ராசாவும், கனிமொழியும் விடுதலையானால் அக்கட்சியின் மதிப்பு பெருகி மளமளவென அக்கட்சிக்கு சாதகமாக வாக்குகள் விழும்.
ஒரு வேளை தி.மு.க.வுக்கு பாதகமாக தீர்ப்பு வந்து ராசா மற்றும் கனிமொழி இருவரும் தண்டனைக்கு உள்ளானால் ஆர்.கே.நகரில் அக்கட்சிக்கு விழவேண்டிய சாதக வாக்குகள் மாறிவிடும்.
இன்று தீர்ப்பு வாசிக்கப்பட இருக்கும் நிலையில் ராசா எந்த சலனமும் காட்டாமல் அமைதியாய் இருக்கிறாராம். கனிமொழியோ வழக்கமாக கலகலப்பாக பேசும் நபர்களிடம் கூட பேசாமல் கிட்டத்தட்ட மெளனமாக இருக்கிறார் என்கிறார்கள்.
நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இருக்கும் நிலையில் இன்று ஜெயலலிதாவின் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது, தினகரனுக்கு ஆதரவான சூழ்நிலையை அவர் உருவாக்கவே என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஆக தி.மு.க.வுக்கு ஒவ்வொரு நொடியும் திக் திக் நொடிகளாகதான் கழிந்து கொண்டிருக்கிறது.