தமிழக அமைச்சர்கள் தரம் குறைந்த வார்த்தையால் பிரதமரை பேசுகின்றனர். பிரதமர் அரசியல் கட்சி தலைவர் அல்ல , இந்திய நாட்டின் பிரதிநிதி. திமுக தலைவர்களை அண்ணாமலை ஒருபோதும் தரம் குறைந்த வார்த்தைகளை பேசுவதில்லை என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
நேர்மையான தமிழகம் உருவாக வேண்டும்
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் , செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட 7 நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தொழில் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக மக்கள் பிரதமர் மீது பெரியளவில் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நீங்கள் பிரதமரின் தூதர்களாக இருக்கின்றீர்கள், 8 ஆண்டு சேவையால் பிரதமர் இந்த நம்பிக்கையை மக்களிடம் பெற்றுள்ளார். கரீப் கல்யாண் திட்டங்கள் உள்ளிட்டவை ஏழை மக்களுக்கு உதவியுள்ளது. பிரதமர் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறார். முன்னேறிய , வளர்ச்சியடைந்த , நேர்மையான தமிழகமாக மாற வேண்டும் என பிரதமர் எதிர்பார்க்கிறார். ஊழலே இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் எதிர்பார்ப்பு, ஊழலற்ற தமிழகம் உருவாக வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பும் கூட என குறிப்பிட்டார்.
மோடியை பார்த்து பயப்படும் திமுக
தற்போதைய தமிழக அரசால் ஊழலற்ற ஆட்சியை தரமுடியாது , தமிழகத்தில் அப்பா , மகன் , மருமகன் குடும்ப அரசியல் செய்கின்றனர் , எனவே வளர்ச்சியடைவது சிரமமாக உள்ளது. பிரதமரை கண்டு திமுகவினர் அஞ்சுகின்றனர். பிரதமரின் படத்தை கூட மத்திய அரசின் திட்டங்களில் இடம்பெறவைக்க பயப்படுகின்றனர். மத்திய திட்டங்களில் தனது படத்தை பயன்படுத்துகிறார் தமிழக முதல்வர். 24 மணிநேரமும் இந்திய மக்களுக்காக பிரதமர் மோடி உழைக்கிறார். நவராத்திரிக்கான 9 நாளில் ஒருவேளை உணவை கூட பிரதமர் அருந்தவில்லை , நீர் மட்டும் அருந்தினார். மக்கள் சேவையை தொடர்ந்து ஆற்றினார். விழாக்களை நாம் கொண்டாடுகிறோம் ,
ஆனால் பிரதமர் சேவையாற்ற பயன்படுத்துகிறார். பிரதமரின் பணிகள் அண்ணாமலையை பாஜகவில் இணைந்து சேவையாற்ற ஈர்த்துள்ளது , உயரிய பதவியில் இருந்து விலகி , மக்கள் சேவையாற்ற கிடைத்த மாபெரும் தலைவர் அண்ணாமலை. கொரானா காலத்தில் 80 கோடி மக்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் மாதம்தோறும் வழங்கப்பட்டது. 4 லட்சம் கோடி இதற்கென செலவிடப்பட்டுள்ளது. திமுக அரசு, மத்திய அரசின் திட்டங்களை முறையாக கேட்டுப் பெற்று , தமிழகத்தில் அமல்படுத்தவில்லை.
விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும்
மத்திய அரசு திட்டங்களால் தங்களது ஆட்சிக்கு பாதிப்பு வருமோ என அஞ்சுகின்றனர். எனவே தமிழக பாஜகவினர் , அண்ணாமலை வழிகாட்டுதல்படி திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகத்தில் மாநில அரசு செய்ய வேண்டிய பணியை அண்ணாமலை திறம்பட செய்து வருகிறார். மாநில அரசும் அரசு அதிகாரிகளும் செய்ய வேண்டிய பணியை பாஜகவினர் செய்து வருகின்றனர். மத்திய அரசு தரமான அரசியை வழங்குகிறது , ஆனால் தரமற்ற அரிசியை மாநில அரசு ரேசன் கடைகளில் விநியோகிக்கிறது.
தமிழக அமைச்சர்கள் தரம் குறைந்த வார்த்தையால் பிரதமரை பேசுகின்றனர். பிரதமர் அரசியல் கட்சி தலைவர் அல்ல , இந்திய நாட்டின் பிரதிநிதி. திமுக தலைவர்களை அண்ணாமலை ஒருபோதும் தரம் குறைந்த வார்த்தைகளை பேசுவதில்லை. விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும் , பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சேறு , சகதியில் தாமரை மலரும் , தாமரை மூலம் வளர்ச்சி கிடைக்கும் .தமிழகத்தில் குடும்ப அரசியலுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைய வேண்டும். தமிழகத்தில் 3 குடும்பம் மட்டுமல்ல , அனைத்து குடும்பமும் வளர வேண்டும் என அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்தவரின் வாரிசு தானே ஸ்டாலின்- அண்ணாமலை