கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து போட்டோ எடுத்த மத்திய அமைச்சர்!! வெடித்தது சர்ச்சை

First Published Jul 7, 2018, 4:11 PM IST
Highlights
union minister jayant sinha meet murder convicts


மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இறைச்சி வியாபாரியை அடித்து கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவந்தவர்களுக்கு மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து பாராட்டியிருப்பது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் மாட்டிறைசி கடத்துவதாக பல பேர் மீது அவ்வப்போது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சில நேரங்களில் கொலையும் செய்யப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி கொண்டே தான் இருக்கிறது. 

பசுவை பாதுகாக்கும் பெயரில் மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். எனினும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 

கடந்த ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் பகுதியில் காரில் மாட்டிறைச்சி கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் அலிமுதீன் அன்சாரி என்ற நபரை பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் 11 பேர் அடித்து கொன்றனர். அந்த வாகனத்திற்கும் தீ வைத்தனர். 

இந்த வழக்கில் 11 பேரும் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கில் 8 பேருக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து கொலையாளிகள் சார்பில் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு தற்காலிக தடை விதித்ததோடு, அவர்களுக்கு ஜாமீனும் வழங்கியது. 

இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த அவர்கள், ஜார்கண்டில் உள்ள மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டில் அவரை சந்தித்தனர். கொலை குற்றவாளிகளை வரவேற்று அவர்களுக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் வைரலாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமைச்சரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஜாமீனில் வெளிவந்தவர்கள் தன்னை வீட்டில் வந்து பார்த்ததால் அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஜெயந்த் சின்ஹா விளக்கமளித்துள்ளார். 

இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. 
 

click me!