2022-23ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் திமுக இளைஞரணி தலைவரும், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது, ‘திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற முதல்வருக்கு எனது நன்றி. அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கும் நன்றி. இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசும் வாய்ப்பை வழங்கிய திமுக கொறடா கோவி.செழியனுக்கும், இந்த மானிய கோரிக்கைகள் மீது பதிலளிக்க உள்ள அமைச்சர் அக்கா கீதாஜீவனுக்கும், என் மீது பேரன்பு கொண்டுள்ள, என் தொகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் அதை உடனுக்குடன் முடித்து கொடுக்கக்கூடிய அத்தனை அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சென்ற ஆண்டு இந்த அவையில் பேசும்போது நீங்கள் வெளிநடப்பு செய்து விட்டீர்கள். நேற்றும் வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இன்று நான் பேசுவது தெரிந்து அதற்காகவே வெளிநடப்பு செய்து விடுகிறீர்கள் என்று நினைத்தேன்.
ஆனால் வெளிநடப்பு செய்யவில்லை. அதற்காக மீண்டும் எனது நன்றி. அப்படி நீங்கள் வெளிநடப்பு செய்து விட்டுச் சென்றாலும் தவறுதலாக என்னுடைய காரில்தான் ஏறி செல்வீர்கள். நீங்கள் மட்டுமல்ல நானும் மூன்று நாட்களுக்கு முன்பு உங்களுடைய காரில் ஏற சென்று விட்டேன். அடுத்தமுறை என்னுடைய காரை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் தயவு செய்து கமலாலயம் சென்று விடாதீர்கள்' என்றார்.
உடனடியாக எழுந்த ஓபிஎஸ் ‘எங்களுடைய கார் எப்பொழுதும் எம்ஜிஆர் மாளிகை நோக்கித்தான் செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'உதயநிதியின் கார் கமலாலயம் வருவதற்கு தகுதி இல்லை. அப்படியே அவர் வர முயற்சி செய்தாலும் கார் ஸ்டார்ட் ஆகாது. ரஜினியின் படிக்காதவன் படத்தில் வருவதுபோல் கார் ஸ்டார்ட் ஆகாது' என்று கூறினார்.