
கமல், ரஜினி என நடிகர்கள் அரசியலுக்கு நுழையும் பரபரப்பால் சற்றே பின்னடைய துவங்கியது தி.மு.க.வின் பரபரப்பு. இதிலிருந்து கட்சியை மீட்டெடுக்க சட்டென கியர் மாற்றிக் கிளம்பியிருக்கிறார் உதயநிதி.
அவரும் ஒரு ஜனரஞ்சக அறிமுகமுடைய நடிகர் என்பதால் நடிகர்களின் அரசியலுக்கு தங்களால் முடிந்த ஒரு செக்! வைக்க முடியுமென்று கணக்குப் போடுகிறது தி.மு.க.
இந்நிலையில் சைதாப்பேட்டையில் நடந்த பொங்கல் விழா கூட்டத்தில் ‘சூரியன் உதித்தால் தாமரை மலரும், இலை கருகும்’ என்று ஒரே லைனில் தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணிக்கு தூபம் போட்டதோடு, பி.ஜே.பி. - அ.தி.மு.க. நட்புறவுக்கு வேட்டும் வைத்தார் உதயநிதி.
அவரது அந்த பேச்சு இன்று வரை அரசியல் அரங்கத்தை அலற வைக்கிறதென்றால் புரிந்து கொள்ளுங்கள் உதயநிதியின் முதல் பந்தே விக்கெட் எடுத்திருக்கும் கதையை.
இந்நிலையில் பொங்கல் விழாவில் பேசும்போது ‘நான் சாதாரண தொண்டர்களில் ஒருவன் தான்’ என்று சொன்ன உதயநிதி, அதற்கு சில நாட்கள் முன்பு ஒரு டி.வி. சேனல் பேட்டியில் ‘தலைமை போட்டியிட்டால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் தயார்.’ என்று சொன்னதை இப்போது அண்டர்லைன் செய்து காட்டுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அறிவாலய வட்டாரத்தை ஸ்மெல் செய்திருக்கும் அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது ‘உதயநிதியை தீவிர அரசியலுக்குள் இறக்கும்போது பக்காவான பதவியுடன் தான் இறக்கப் போகிறார்களாம். அதாவது ஸ்டாலின் கோலோச்சிய இளைஞர் அணியில்தான் உதயநிதிக்கும் பதவியாம்.
இப்போது இளைஞரணியின் மாநில செயலாளராக இருக்கும் சாமிநாதனின் செயல்பாடுகள் ஒன்றும் உருப்படியாக இல்லை என்பது தலைமையின் எண்ணம்.
எனவே அவரது இடத்தில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.வை நியமித்துவிட்டு அந்த இடத்தில் உதயநிதியை உட்கார வைக்கலாம்! எனும் திட்டம் ஓடுகிறதாம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உதயநிதியின் ரசிகர் மன்றத்தின் மாநில தலைமையில் இருப்பது மகேஷ் என்பதுதான்.
மேலும் தீவிர அரசியலில் இறக்கிய கையோடு உதயநிதி போட்டியிட இருக்கும் தொகுதியையும் அவருக்கு சுட்டிக்காட்டி அங்கே மக்களுடன் தொடர்ந்து டச்சில் இருக்கும்படி அவருக்கு கட்டளையிட இருக்கிறார் ஸ்டாலின். அந்த தொகுதி தென்சென்னைக்கு உட்பட்ட சைதாப்பேட்டை தொகுதிதான் என்று அறிவாலயத்தில் அழுத்தமாக பேசுகிறார்கள்.
உதயநிதியை இந்த தொகுதிக்குள்ளிருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் அறிமுகமாக்கி, அவரை கண்டிப்பாக ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மாஜி மேயர் மா.சுப்பிரமணியனிடமாம்.
அவரும் முழு மகிழ்ச்சியுடன் அதற்கு ஓ.கே. சொல்லிவிட்டாராம் ஸ்டாலினிடம்.
இதில் இன்னொரு விசேஷ விஷயம் என்னவென்றால், சென்னை வந்த பின் கருணாநிதி இந்த சைதாப்பேட்டை தொகுதியில்தான் போட்டியிட்டு வென்றார். ஆக அந்த செண்டிமெண்டும் இருப்பதால் உதயநிதியை உத்வேகத்துடன் ப்ரமோட் செய்யும் மூவ்களில் இறங்கிவிட்டார்கள்.” என்கிறார்கள்.
என்னவோ போங்க பாஸ்!