நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என தெரிவித்துள்ள உதயநிதி, என்னை போல் அனைவரும் உணர வேண்டும். ஒரு உதயநிதி போதாது இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக சென்னைக்கு 15 வாள்வீச்சு வீரர்கள் மணிப்பூரில் இருந்து வந்துள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்ட மணிப்பூர் வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி நாளை மறுநாள் நடத்தும் நீட் தேர்விற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளார்கள். அது குறித்த விபரம் நாளைய தினம் முதலமைச்சர் வெளியிட உள்ளார்.
என்ன விமர்சனம் வந்தாலும் திமுக அமைச்சர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வோம் விமர்சனங்கள் குறித்த கவலை இல்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் பக்கம் உடன் நிற்போம். நீட் தேர்வால் மாணவர்கள் பலியாவதை தடுக்க வேண்டும். என்ன விமர்சனம், கேலி, கிண்டல் வந்தாலும் அதைப்பற்றி கவலை கொள்ள போவதில்லை. நாங்கள் இந்த போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்துவோம். நீட் தேர்வை ஒழிப்பதற்கான முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன். என்னைப்போல் அனைவரும் உணர வேண்டும் என கேட்டுக்கொண்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதி கொடுத்தேன். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம்.
அதிமுகவை போல் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற வில்லை. நான் இந்த போராட்டத்தில் உணர்வுபூர்வமாக பங்கேற்கிறேன். மாணவர்கள் பக்கம் துணை நிற்பேன்.மக்களும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும். இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். நீட் தேர்வுக்கு முன் உலக புகழ் பெற்ற மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உருவானார்கள். இந்த போராட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என மக்கள் பங்கேற்க வேண்டும். மாணவர்கள் பக்கம் துணை நிற்க வேண்டும் என உதயநிதி கேட்டுக்கொண்டார்.