
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு இளைஞர் நலத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையை ஒதுக்கலாம் என்ற அளவுக்கு பேச்சுகள் சூடுபிடித்துள்ளன.
விரைவில் அமைச்சராகும் உதயநிதி
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து பேசிவரும் நிலையில் இந்தப் பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அதன் பிறகு உதயநிதி அமைச்சராக்கப்படுவார் என்று திமுகவில் பேசப்படுகின்றன. சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கிடைக்கும் அதே மரியாதை இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கிடைக்கிறது. மேலும் கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து திமுக அமைச்சரவையில் இளைஞரணியைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைத்துவிடும்.
இரு துறைகளுக்கு வாய்ப்பு
ஆனால், இந்த முறை இளைஞரணியில் ஒருவருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, உதயநிதியை அமைச்சராக்குவதன் மூலம் அந்தக் குறை தீர்ந்துவிடும் என்று திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் ஸ்டாலினிடம் கூறியிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஸ்டாலின் அமைச்சரவையில் நான்கு புதிய முகங்கள் அமைச்சராகியுள்ளனர். இதனால், புதிய முகமான உதயநிதியை அமைச்சராக்குவதிலும் சிக்கல் இல்லை என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். உதயநிதிக்கு இளைஞர்ளை வசீகரிக்கும் வகையில் இளைஞர் நலத் துறையும் 2006-இல் ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தது போல அந்தத் துறையையும் இணைத்து வழங்கலாம் என்று ஸ்டாலினுக்கு மூத்த தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகள் வாயில் அவல்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக திமுகவில் பெரும் ஆதரவு இருந்தாலும், அவசர அவசரமாக அவரை அமைச்சராக்குவதை ஒரு தரப்பினர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. 2006-இல் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவியேற்றபோது, 30 ஆண்டுக் கால அரசியல் அனுபவம் அவருக்கு இருந்தது என்பதை நினைவுக் கூறுகிறார்கள் அக்கட்சியில் சிலர். தமிழக சட்டப்பேரவைக்கு நான்காவது முறையாக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட போதுதான் அமைச்சரானார். உதயநிதி திமுகவுக்குள் வந்து 4 ஆண்டுகள் கூகும் நிலையில், அவரை அமைச்சராக்கினால், எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய அவல் கிடைத்தது போலாகிவிடும் என்றும் ஒரு தரப்பினர் திமுகவில் சொல்கிறார்கள். என்றாலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்பதில் இதுபோன்ற பேச்சுகள் தடையாக இருக்காது என்று அறிவாலய தகவல்கள் சொல்கின்றன.