
பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழக சரித்திரத்தில் கரும்புள்ளி என பாஜக தலைவர்கள் கூறி வரும் நிலையில் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், கண்ணீர் வரும்படி சிரித்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு மறைமுகமாக பாஜகவினரை கலாய்த்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- நாட்டின் வளர்ச்சி மற்றும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தில் தமிழக அரசு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புக்கு ஏற்ப, நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். இதுதான் உண்மையான கூட்டுறவு, கூட்டாட்சி.
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் காலப்போக்கில் ஒன்றிய அரசின் பங்களிப்பு குறைவதால் மாநிலம் அரசின் பங்கு உயருகிறது. மேலும் பயனாளிகளில் செலுத்த வேண்டிய தொகையும் மாநில அரசுதான் ஏற்கிறது. இதன் காரணமாக மாநில அரசின் நிதி சுமை உயருகிறது. எனவே, தொடக்கத்தில் கூறிய ஒன்றிய அரசின் பங்கு, திட்டம் முடியும் வரை தொடர வேண்டும். பயனாகளின் பங்களிப்பு ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து ஏற்க வேண்டும்.
கச்சதீவை மீட்க இதுதான் உரிய தருணம், ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும். இழப்பீடு காலத்தை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இந்திக்கு நிகராக அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளின் நியாயத்தை பிரதமர் உணர்வார் என்று நம்புகிறேன் என தெரிவித்தார். முதல்வரின் இந்தப் பேச்சை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதேநேரத்தில் தமிழக பாஜக தலைவர்களை ஸ்டாலின் பேச்சுக்கு பயங்கர டென்ஷன் ஆகியுள்ளனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாட்டின் பிரதமராக சென்னை வந்தார். அவர் பாஜக நிகழ்ச்சிக்காக வரவில்லை. ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சான்று, தமிழக முதல்வர் நடந்து கொண்ட விதம். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழக சரித்திரத்தில் கரும்புள்ளி என ஆவேசமாக கூறியிருந்ததார். அதேபோல், ஒன்றிய’ அரசு, ‘ஒன்றிய’ அரசு என்று பலமுறை கூறி புளங்காகிதம் அடைந்தது ‘குன்றிய அரசு’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலினை தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், சட்டப்பேரவையில் இருக்கும்போது உதயநிதி ஸ்டாலின் கண்கள் கலங்கும்படி சிரித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் உதயநிதியின் நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இருக்கிறார்.