
தமிழகம் முழுவதும் சுற்றி வந்த உதயநிதி
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை அடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதனையடுத்து சுமார் 8 ஆண்டுகள் திமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தது. தோல்வி விரக்தியில் திமுக தொண்டர்கள் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கூறப்பட்டது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதற்காக பரிசி அளிக்கும் வகையில் உதயநிதிக்கு திமுகவில் இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றியை உறுதிபடுத்தினார். குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மக்களுக்கு விளங்கும் வகையில் ஒற்றை செங்கலை காண்பித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
.
அமைச்சராகிறார் உதயநிதி
இதனையடுத்து தேர்தல் முடிவில் திமுக கூட்டணி எதிர்பார்த்ததைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போதே அமைச்சர் பதவி உதயநிதிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தநிலையில் திமுக ஆட்சி அமைத்து வருகிற 7 ஆம் தேதியோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த இடைப்பட்ட ஒரு ஆண்டில் மக்கள் நல திட்டங்களில் உதயநிதி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். தனது சேப்பாக்கம் தொகுதி மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 10 ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது. இதனையடுத்து ஒரு சில நாட்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதிக்கு மட்டுமில்லாமல் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி சட்ட மன்ற தொகுதியில் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற டி.ஆர்.பி. ராஜாவிற்கும் அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
விளையாட்டு துறை வழங்க திட்டம்
ஏற்கனவே மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவேண்டும் என கூறி வரும் நிலையில், உதயநிதிஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு வந்த உதயநிதியின் காரில் அமைச்சர்களுக்கு பொறுத்தப்படவுள்ள அரசு முத்திரைக்கான ஸ்டாண்ட் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. எனவே சட்ட மன்ற கூட்டம் முடிவடைந்ததும் எந்த நேரத்திலும் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உள்ளாட்சி துறை அல்லது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.