அன்று மிக்சர் சாப்பிட்டதே காரணம்.. தமிழகத்தை அடகு வைத்த அடிமைகள்.. அதிமுகவை காரசாரமாக விமர்சித்த உதயநிதி..!

By Asianet TamilFirst Published Sep 5, 2020, 9:23 AM IST
Highlights

கர்நாடக சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக மோடி திணித்தபோது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்த எடுபிடி அரசே மாணவர்களின் குழப்ப நிலைக்கு காரணம் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தொற்று காரணமாக கல்லூரித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுவந்தன. ஆனால், கல்லூரி இறுதியாண்டைத் தவிர பிற கல்லூரித் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தமிழக அரசின் இந்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஏ.ஐ.சி.டி.இ.) ஏற்கவில்லை என்ற தகவல் வெளியானது.
மேலும் அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் விதிகளை மீறி அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்தது அண்ணா பல்கலைக்கழக்கத்தின் அங்கீகாரத்தை கேள்விகுறியாக்கும் என்று துணைவேந்தர் சூரப்பா  தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்துக்கு பதில் அளித்த தமிழக உயர்க் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ‘அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு ஏ.ஐ.சி.டி.இ. மறுப்பு என்ற தகவலில் உண்மையில்லை. அதுதொடர்பாக எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னுடைய கருத்தை ஏ.ஐ.சி.டி.இ.யின் கருத்தாக திணிப்பதை ஏற்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட் விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். அதில், “தேர்வில்லாமல் தேர்ச்சியென அறிவிக்க முடியாது எனும் தன் கருத்தை AICTE கருத்தாக சூரப்பா திணிக்க பார்க்கிறார்’ என்கிறார் உயர்கல்வி அமைச்சர். கர்நாடக சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக மோடி திணித்தபோது மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்த எடுபிடி அரசே மாணவர்களின் குழப்ப நிலைக்கு காரணம்!
‘பல்கலை வளாகங்களை காவிமயமாக்க வேண்டாம்’ என தலைவர் மு.க.ஸ்டாலின் அன்று கண்டித்தார். கமிஷனுக்கு பங்கம்வருமோ என அமைதியாக இருந்துவிட்டு இன்று தேர்தல் வந்ததும், அடிமை வாழ்விலிருந்து மீண்டதுபோல் நாடகமாடினால் நம்பிவிடுவோமா? நீங்கள் அடிமைகளே, கமிஷனுக்காக தமிழகத்தை அடகுவைத்த அடிமைகளே” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

click me!