உதயநிதிக்கு சீட் இல்லை... வாரிசுகளைத் தவிர்க்க மகனுடன் மு.க.ஸ்டாலின் நடத்தும் நாடகமா இது..?

By Thiraviaraj RMFirst Published Mar 4, 2021, 5:58 PM IST
Highlights

'உதயநிதிக்கே சீட் இல்லை... அதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்குக் கேட்காதீர்கள்' என எங்களிடம் சொல்வதற்காக இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள்.

தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டி இல்லை என்பது தந்தையும் மகனும் சேர்ந்து நடத்தும் நாடகம் என வாரிசுகளுக்கு 'சீட்' கேட்ட திமுக சீனியர் தலைவர்கள் கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக என்றாலே 'வாரிசு அரசியல்தான்' என்ற எண்ணம் தமிழக மக்களிடையே அழுத்தமாக பதிந்துவிட்டது. இதை மேலும் வலுவாக்கும் விதமாக, ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவுக்கு இளைஞர் அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு கட்சி மட்டத்திலேயே பல எதிர்ப்புகள் எழுந்தபோதிலும், ஸ்டாலின் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
 
"உதயநிதி கைகாட்டுபவர்களுக்கே கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கட்சிக்காக ஆண்டாண்டு காலமாக உழைத்த திமுகவினர், கடும் விரக்தியில் உள்ளனர். ஆனால், நாளை தனக்குப் பின்னர் தனது மகன் கட்சித் தலைவர் பதவிக்கு வரும்போது, எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது என்ற திட்டத்திலேயே ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார்" என நியாயமாக கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காத உடன்பிறப்புகள் குமுறுகின்றனர்.
 
போதாதற்கு ஸ்டாலின் 350 கோடி ரூபாய் கொடுத்து கூட்டி வந்த ஐபேக் டீமின் பிரசாந்த் கிஷோரும், உதயநிதிக்கு எதிராகவே ரிப்போர்ட் கொடுத்தாராம். "அவருக்கு கட்சியில் எப்பதவியும் கொடுக்க வேண்டாம். அதேபோன்று தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக்கூடாது. மீறிச் செய்தால், திமுக தோல்விக்கு நாளை என்னை எதுவும் கேட்கக்கூடாது" எனக் கறாராகச் சொல்லியும், ஸ்டாலின், மகன் மீதான பாசத்தில் அதைப் புறக்கணித்தார்.
 
இது ஒருபுறம் இருக்க, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்தார் உதயநிதி. இப்படி உதயநிதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பார்த்து, திமுக மூத்த நிர்வாகிகள் பலரும், தங்களது பிள்ளைகளுக்கு 'சீட்' கேட்டு கட்சித் தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக, முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண், கடலூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் எம்.ஆர்.கே.பி.கதிரவன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலுவின் மகன் டாக்டர் கம்பன் உள்பட வந்து குவிந்துள்ள வாரிசு விருப்ப மனுக்களின் எண்ணிக்கையைப் பார்த்து அறிவாலயமே அதிர்ந்து போய்விட்டதாம்.


 
இதனையடுத்தே, "சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு கொடுத்த உதயநிதி தேர்தலில் போட்டி இல்லை" என்ற தகவல் வெளியாகி உள்ளது.ஆனால், "எங்களது வாரிசுகளுக்கு 'சீட்' கேட்காமல் இருப்பதற்காக ஸ்டாலினும், உதயநிதியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது. 'உதயநிதிக்கே சீட் இல்லை... அதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்குக் கேட்காதீர்கள்' என எங்களிடம் சொல்வதற்காக இப்படி ஒரு தகவலை பரப்புகிறார்கள்.
 
ஸ்டாலின் குடும்பத்தினரை அரியணையில் ஏற்ற மட்டும்தான் நாங்கள் கட்சியில் இருக்கிறோமா... ஏன் எங்கள் பிள்ளைகளும் எம்.எல்.ஏ ஆனால் என்ன தப்பு?" என எதிர் கேள்வி கேட்கிறார் மூத்த உடன்பிறப்பு ஒருவர்.அதே சமயம், கட்சிக்காக உழைக்கும் சாமான்ய திமுகவினர், தலைமையும் மாவட்டச் செயலாளர்களும் தங்களது வாரிசுகளுக்காக முட்டி மோதுவதை அறிந்து தலையில் அடித்துக்கொண்டுள்ளனர். இந்த சூழலில், வாரிசுகளுக்கு சீட் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் சிக்கல். என்னதான் செய்வது திமுக தலைவர் ஸ்டாலின் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாராம்!

click me!