விஜயகாந்த் இடத்தை நிரப்புவாரா விஜய பிரபாகரன்?... அம்மா பிரேமலதாவை தொடர்ந்து முதன் முறையாக விருப்ப மனு தாக்கல்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 4, 2021, 5:45 PM IST
Highlights

அம்மா பிரேம லதாவைத் தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்பு மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

சட்டப்பேரவைத் தேர்தல் எப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.  அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தையில் வேகமாக ஈடுபட்டுள்ளன. விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் திமுக 3வது கட்ட நேர்காணலையும், அதிமுக ஒரே கட்டமாகவும் இன்று நேர்காணல் நடத்தி வருகின்றனர். தேமுதிகவில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. 

அன்றைய தினம் விருத்தாச்சலம் தொகுதியில் கேப்டன் விஜயகாந்தும், விருகம்பாக்கத்தில் பிரேமலதா விஜயகாந்தும், அம்பத்தூரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டுமென தேமுதிகவினர் விருப்ப மனு அளித்தனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெற்று வரும் கூட்டத்தில்,  தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். 

எந்த தொகுதியில் போட்டி என்பதையே குறிப்பிடாமல் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு அளித்துள்ளார். அம்மா பிரேம லதாவைத் தொடர்ந்து சற்று நேரத்திற்கு முன்பு மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், “தொண்டர்களின் ஆசைக்காக விருப்ப மனு தாக்கல் செய்ததாகவும், கேப்டன் விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்ய வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார். கேப்டன் விஜயகாந்தும், கட்சி நிர்வாகிகளும் இணைந்து எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் தயார் எனக்கூறிய விஜய பிரபாகரன், எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவது உறுதி என்றும் நம்பிக்கையுடன் கூறினார். 

click me!