சசிகலாவோடு செல்ல அதிமுகவில் அலைபாயும் இரு அமைச்சர்கள்... மு.க. ஸ்டாலின் போட்டுடைத்த ரகசியம்..!

By Asianet TamilFirst Published Dec 28, 2020, 10:26 PM IST
Highlights

சசிகலா விரைவில் வெளியில் வரப் போகிறார். அவரோடு போய்விடலாமா அல்லது முதல்வர் பழனிசாமியோடு இருந்துவிடலாமா என்ற குழப்பத்தில் இந்த இரு அமைச்சர்களும் அலைபாய்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன்  என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

நாகை, திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் 'தமிழகம் மீட்போம் - 2021' சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்று பேசினார். “அமைச்சர் ஓ.எஸ்.மணியனை இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு அமைச்சர் என்றே அழைக்கிறார்கள். தனக்குச் சொந்தமாக இறால் பண்ணை அமைக்க அடப்பாறு முகத்துவாரத்தை அடைத்துவிட்டார் என்று பொதுமக்கள் சொல்கிறார்கள். அது அவருக்குத் தெரியுமா? இதனால், மற்றவர்கள் விளைநிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதுவும் அவருக்குத் தெரியுமா? 


தலைஞாயிறு பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஓ.எஸ். மணியன் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மக்கள் சொல்லும் புகாருக்கு அவருடைய பதில் என்ன? மருமகன் பெயரில் டெண்டர்கள் எடுத்து வருகிறார் என்று சொல்லப்படுவது உண்மையா? கஜா புயலால் தலைஞாயிறில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்ட 500 வீடுகள் எந்த நேரத்திலும் இடிந்துவிடும் அவல நிலையில் இருக்கிறது என்று சொல்கிறார்களே. இதில் நடந்த நிதி முறைகேடுகள் என்ன? நாகை மாவட்டம் முழுவதும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவது யார்? அமைச்சருடைய பினாமிகளா? இந்த விவகாரத்தில் கொலை வரைக்கும் போனதே. இதற்கு அமைச்சரின் பதில் என்ன? இவையெல்லாம் நாகை மக்கள் கேட்கும் கேள்விதான்.
அவருக்குப் பணத்தைக் காட்டினால்தான் ‘ஓ யெஸ்’ என்பாராம். மற்றபடி ‘நோ’ மணியன்தான். இப்படி அமைச்சர் காமராஜாக இருந்தாலும் சரி ஓ.எஸ்.மணியனாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இந்த மாவட்டத்து மக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. தங்களைப் பற்றி மட்டுமே கவலை. தங்கள் பதவியைப் பற்றி மட்டுமே கவலை. சசிகலா விரைவில் வெளியில் வரப் போகிறார். அவரோடு போய்விடலாமா அல்லது முதல்வர் பழனிசாமியோடு இருந்துவிடலாமா என்ற குழப்பத்தில் இந்த இரு அமைச்சர்களும் அலைபாய்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அவர்களால் பொதுமக்களைப் பற்றி  சிந்திக்க முடியுமா?” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
 

click me!