ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலுவை எதிர்த்து மறைந்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
ஜெயங்கொண்டம் தொகுதி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார். பாலு இந்தத் தொகுதியில் போட்டியிட பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பாலுவை எதிர்த்து மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியுடன் இணைந்து சந்திக்கிறது. இதுதொடர்பாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், “குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் பெருமக்களும் இந்தத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.” என்று தெரிவித்தார்.