#BREAKING அடித்து பேசி 60 தொகுதிகளை வாங்கிய தேமுதிக... ஒருவழியாக அமமுக கூட்டணியில் ஐக்கியம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 14, 2021, 8:01 PM IST
Highlights

ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 60 தொகுதிகளை அமமுகவிடம் இருந்து பெற்றுள்ளது தேமுதிக. இதற்கான ஒப்பந்தத்திலும் இருகட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் விஜயகாந்த் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இதனையடுத்து, அமமுகவுடன் ரகசிய பேச்சுவார்தையை தேமுதிக நடத்தி வந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அமமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில், தமிழகத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் தனித்து போட்டியிடுவதை விட, கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சிறந்தது என கருத்து தெரிவித்தனர். இதனால் முடிவை மாற்றிக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் மீண்டும் அமமுக பக்கம் தூது அனுப்பினர். 

ஏற்கனவே தேர்தல் நிதி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக தினகரன் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. நிதி தான் இல்லை தொகுதியையாவது அள்ளிவிட வேண்டுமென தேமுதிக நினைத்தது. அதன்படி இன்று மாலை தேமுதிக - அமமுக இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிகவுக்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகின. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் 60 தொகுதிகளை அமமுகவிடம் இருந்து பெற்றுள்ளது தேமுதிக. இதற்கான ஒப்பந்தத்திலும் இருகட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் 60 (அறுபது) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

இந்த தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள்.

click me!