
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன், லண்டனில் இருந்து, லெக்சஸ் என்ற சொகுசு காரை, கடந்த 1994-ஆம் ஆண்டு இறக்குமதி செய்தார்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கார் எனக்கூறி, இறக்குமதி செய்ததில் அவர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில், அதே ஆண்டில் அதவாது 1994-ஆம் ஆண்டில் வெளியான புதிய ரக கார் என தெரிய வந்தது.
எனவே, வரி ஏய்ப்பு மூலம், சுமார் ரூ.1 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, நடராஜன், அவரது உறவினர் வி.என்.பாஸ்கரன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் நடராஜன் உள்ளிட்டோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மார்ச் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார்.