
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம்குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என 7 திமுக எம்.எல்.ஏக்களுக்கு அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவில் பல குளறுபடிகளும் மோதல்களும் நிலவி வருகின்றன. பன்னீர்செல்வம் வகித்துவந்த முதலமைச்சர் பதவியை சசிகலா அடைய முயற்சி மேற்கொண்டதால், ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
சசிகலா முதலமைச்சராக பதவி வகித்திடுவோம் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு சென்றார்.
அவர் சிறைக்கு செல்லும் முன் அவர் தரப்பில் எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யும் வகையில் வழிவகை செய்து விட்டு சென்றார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவி வகிக்க கூடாது என கோரி ஒ.பி.எஸ் தரப்பினர் ஆளுநரிடம் மனு அளித்தனர்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி அதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்தமையால் அவரை பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
மேலும் பெரும்பான்மையை நிருபிக்குமாறும் உத்தரவிட்டார். இந்நிலையில், சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது எதிர்கட்சியான திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகரின் கையை பிடித்து இழுப்பதும், அவரது இருக்கையில் அமர்வதும் போன்ற செயல்பாடுகள் அரங்கேறின.
இதையடுத்து சபாநாயகர் திமுகவினரை பேரவையைவிட்டு வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுகவினர் அவை விதியை மீறி செயல்பட்டதாக பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்து கொண்ட விதம் குறித்து விளக்கம் அளிக்குமாறு திமுக உறுப்பினர்கள் கு.க.செல்வம், ரவிச்சந்திரன், மஸ்தான், முருகன், உள்ளிட்ட 7 பேருக்கு அவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மார்ச் 23 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது