
பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தினகரன் போட்டியிட்டபோது, அவரை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
அந்த வீடியோ காட்சிகளை தேடிப்பிடித்து, கிராபிக்ஸ் உதவுடன் அதில் சில மாற்றங்களை செய்து, ஜெயலலிதா தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்பது போன்ற வீடியோ காட்சியை உருவாக்கி இருக்கிறது சசிகலா தரப்பின் தொழில் நுட்ப பிரிவு.
ஒரு சில இடங்களை தவிர, ஜெயலலிதாவின் உதட்டசைவுக்கும், வெளிவரும் குரலுக்கும் சிங்க் ஆகாத வகையில், அதில் அவருடைய குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.இ.அதிமுக வேட்பாளராக தம்பி தினகரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நல்லவர், வல்லவர், உங்களுக்காக உழைக்க காத்துக் கொண்டிருப்பவர் என்பதெல்லாம், பெரியகுளத்தில் ஜெயலலிதா பேசியது.
ஆனால், அவர் கைகளை உயர்த்தி, இரண்டு விரல்களை காட்டி, இரட்டை இலையை சொல்லுவதை - தொப்பி சின்னத்தை சொல்லுவதாக தொழில் நுட்ப பிரிவு மாற்றி அமைத்துள்ளது.
இப்படி ஒரு சாதாரண கிராபிக்ஸ் தொழில் நுட்பத்திற்கு, தகவல் தொழில் நுட்ப பிரிவு அவசியம் இல்லை.
மேலும் இந்த வீடியோவில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ளது, நமக்கே அப்பட்டமாக தெரிகிறது.
அதாவது, ஆர்.கே.நகரில், இரட்டை இலை சின்னத்தை மட்டும் தேர்தல் ஆணையம் முடக்கவில்லை. அ.இ.அதிமுக என்ற கட்சி பெயரை பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது.
அதனால், கட்சி பெயரை சொல்லி ஜெயலலிதா, தினகரனை அறிமுகப்படுத்துவது, தேர்தல் ஆணைய உத்தரவை மீறும் செயலாகும்.
ஒரு வேளை, தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வீடியோ பயன்படுத்தப்பட்டு, தினகரன் வெற்றி பெற்றால், தேர்தல் ஆணைய விதி மீறலை காரணம் காட்டி அவரை பதவி நீக்கமே செய்யலாம்.
அல்லது அதற்கு முன்னதாகவே, கட்சி பெயரை சொல்லும் இந்த வீடியோவை பயன்படுத்துவதற்கு தடை கோரி, எதிர் தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகலாம்.
ஜெயலலிதாவின், பிரச்சார வீடியோவை வலைவீசி தேடி எடுத்து அதை பயன்படுத்தும் மகிழ்ச்சியில். கட்சி பெயர் இடம்பெறுவதை எடிட் செய்ய மறந்து விட்டனர் தொழில் நுட்ப பிரிவினர்.