இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி தரப்பின் வாதம் கடந்த 6 ஆம் தேதியே முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் வாதிட அவகாசம் கோரியதால் தேர்தல் ஆணையம் எரிச்சல் அடைந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து, வழக்கு விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ், அணியினருக்கும், டிடிவி தினகரன் அணியிருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை, இன்று 7 ஆம் கட்ட விசாரணை நடைபெற்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின்போது, டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் தங்களது வாதங்களை முன்வைத்தார். ஆனால், டிடிவி தினகரன் அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக எடப்பாடி அணியினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் எடப்பாடி தரப்பு மற்றும் ஒபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். இதைதொடர்ந்து மீண்டும் வாதிட டிடிவி தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். இதனால் தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் எரிச்சல் அடைந்துள்ளனர்.