
ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது.ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து சென்ற பிறகு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
டி.டி.வி.தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட பிறகு அக்கட்சியின் பொறுப்புகளை கவனித்து வருகிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவிற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் அவர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மறைந்ததால் காலியான ஆர்.கே,நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் திமுகவும் ஓபிஎஸ் அணியினரும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் பிசியாகிவிட்டனர்.
ஆனால் சசிகலா தரப்பு அதிமுகவின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. டி.டி.வி.தினகரன் போட்டியிடலாம் என அதிமுகவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே நேரத்தில் சசிகலா தரப்புக்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு இருப்பதால் தினகரன் அங்கு போட்டியிட மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுவிட்டால் தனக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடுமோ என அவர் அஞ்சுவதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே போன்று அதிமுகவில் வேறு யாரும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜெயலலிதா வளர்த்த அதிமுக இப்படி தேர்தலில் போட்டியிட அஞ்சுவது என்பது மிகவும் வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் உண்மையான கழக தொண்டர்கள்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் "ஸ்டாலின் அதிமுகவை அழிக்க நினைக்கிறார் அவர் என்ன செய்தாலும் அவரது எண்ணம் நிறைவேறாது என்று தெரிவித்தார்.
மேலும் சசிகலா நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து நல்ல பதில் வரும் எனவும் தெரிவித்தார்.