இனி வரும் எல்லாத் தேர்தல்களில் நாங்கதான் ஜெயிப்போம் !! ஒட்டன்சத்திரத்தில் செம மாஸ் காட்டிய தினா !!

By Selvanayagam PFirst Published Aug 27, 2018, 7:45 AM IST
Highlights

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார் என்றும், தற்போது ஜெயலலிதா  பெயரில் நடக்கும் போலியான ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இனி வரும் அனைத்துத் தேர்தல்களிலும் தங்கள் கட்சி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின்  துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ,கட்சியும், ஆட்சியும் தற்போது நம்மிடம் இல்லை. இரட்டை இலை சின்னம் அவர்களிடம் இருந்து, அது தோல்வி சின்னமாக மாறிவிட்டது என்றார்.

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். பிற கட்சியினர் கூட்டம் நடத்தினால் அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. ஆனால், அ.ம.மு.க. கூட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்க பயப்படுகிறது. நாங்கள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை அணுகி தான் அனுமதியை பெறுகிறோம். ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் அ.ம.மு.க.வை பார்த்து நடுங்குகின்றன என கிண்டல் செய்தார்..

முதல்மைச்சர்  எடப்பாடி பழனிசாமி என்னை குட்டி எதிரி என்று கூறுகிறார். நான் ஜெயலலிதாவின் குட்டி. அவர், 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி அல்ல. 16 ஆயிரம் அடி பாய்வேன். நாங்கள் யார் என்பதை தமிழகம் மட்டும் அல்ல, இந்திய துணைக்கண்டமே அறிந்து கொண்டுள்ளது. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்பது விசாரணை ஆணையத்தின் மூலம் தெரியவந்து கொண்டு இருக்கிறது எனவும் டி.டி.வி. கூறினார்..

கருணாநிதி மரணத்துக்கு பிறகு, அவருக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று முதலமைச்சரை  சந்தித்த பிறகு தான் அவர்களுக்கிடையே பெரிய சதித்திட்டம் இருப்பது தெரியவருகிறது. தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருக்கிறதோ? இல்லையோ? எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி இருக்கிறது என குற்றம்சாட்டினார்..

நான், இரட்டை இலையை உங்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக தான் திகார் சிறைக்கு போனேன். இப்போது நடப்பது ஊழல் ஆட்சி. இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. அவருடைய பெயரில் நடக்கும் போலி ஆட்சி. இதனை அகற்ற வேண்டும். தனிப்பட்ட காரணத்துக்காக இந்த ஆட்சியை நான் கவிழ்க்க நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றியை பெறும். வருகிற 31-ந்தேதி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக் கில் நல்ல தீர்ப்பு வரும் என்று தெரிவித்த தினகரன்,  பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்தார்.

click me!