திமுக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்!

By vinoth kumarFirst Published Aug 26, 2018, 4:46 PM IST
Highlights

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆகையால் அவர் போட்டியின்றி செவ்வாய் கிழமை தேர்வு செய்யப்படுகிறார்.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. ஆகையால் அவர் போட்டியின்றி செவ்வாய் கிழமை தேர்வு செய்யப்படுகிறார். அதேபோல் திமுக பொருளாளர் பதவிக்கும் துரைமுருகன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். திமுக தொடங்கிய பிறகு அதன் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்ததையடுத்து திமுக தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுந்தது. இதனால் அவசர அவசரமாக செயற்குழுவை கூட்டி, ஸ்டாலினை திமுக தலைவராக தேர்வு செய்யலாம் என முடிவு எடுக்கப்பட்டது. திமுக பொதுக்குழு ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்று க.அன்பழகன் அறிவித்தார். 

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கும், துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதற்கான வேட்பு மனுவை எடுத்துக்கொண்டு திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் நேரில் சென்று ஆசிபெற்றார். இதனையடுத்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல் திமுக பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகனும் வேட்புமனு கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.

இதைத்தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி படத்துக்கு மலர்தூவி மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பிறகு அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் 65 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய திமுக தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினும், திமுக பொருளாளர் பதவிக்கும் துரைமுருகனும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.

click me!