
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மத்திய அரசு, போலி நிறுவனங்கள் மூலம் பலர் வரி ஏய்ப்பும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டறிந்தது. இதை அடுத்து, தமிழகம், கர்நாடகம், தில்லி, தெலங்கானா மாநிலம் என பல இடங்களில், சுமார் 180க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஒரு நாளில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையில் பெருமளவிலான சோதனைகள், இன்று ஒரே நாளில், ஒரே நேரத்தில், சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனின் அடையாறு வீடு, புதுவையில் உள்ள பண்ணை வீடு என பல இடங்களும் தப்பவில்லை. ஆனால், அடையாறு வீட்டில் ஒரு அதிகாரி வந்தார் என்றும், சோதனை எல்லாம் நடக்கவில்லை, நான் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு தகவலைச் சொல்லி, அவர்களை வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன் என்றும் சொல்லியுள்ளார் தினகரன்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஜெயா டிவியில் என் பேட்டியை சோதனை நடைபெறும் போது போடக்கூடாது என வருமான வரித்துறை கூறியது கண்டிக்கத்தக்கது என்று கூறிய டி.டி.வி தினகரன்,
எஸ் ஆர் எம் நிறுவுனர்
பச்சைமுத்து வீட்டில் ரெய்டு நடக்கும் போது அவரது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது என்று சொன்னார்களா? அப்படி இருக்கும் போது, ஏன் என் பேட்டியை ஜெயா டிவியில் போடக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசு எங்களை மிரட்டிப் பார்க்கிறது என்று கூறிய தினகரன், என் மாநிலச் செயலாளர் வீட்டில் ரெய்டு நடக்கிறது. எங்கள் யாருக்கும் பயமில்லை. மன்னார்குடியில் யாரும் இல்லாத வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. ஜெயா டிவியில் நடக்கும் வருமான வரி சோதனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்று முத்தாய்ப்பாகக் கூறினார்.
நாங்கள் எத்தனையோ சோதனைகளை சந்தித்து விட்டோம். என் 30 வயதில் சிறையில் நான் இருந்திருக்கிறேன். என்ன மிஞ்சிப் போனால் ஒரு சில வருடங்கள் சிறையில் போடுவார்கள். அதற்குப் பின்னர் நான் வெளியில் வந்து அரசியல் செய்யத்தான் போகிறேன். என்ன தூக்கில் போட்டு கொலையா செய்து விடுவார்கள். எதற்கு நாங்கள் பயப்பட வேண்டும். எதற்கும் அஞ்ச மாட்டோம். சின்ன வயதில் இருந்தே எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வாழ்ந்தவர்கள்தான் எங்கள் குடும்பத்தினர். அதனால் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்கள்.
இப்போது பொதுச் செயலர் இல்லாமல்தான் கட்சி நடக்கிறது. நான் இல்லாமலும் ஒருவரை வைத்து கட்சியை நடத்துவோம். ஓபிஎஸ், எடப்பாடியை அப்படித்தான் கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் சரியில்லை என்பதால்தான் அவர்களை நீக்க போராடுகிறோம். எனவே, நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை... என்று கூறினார் தினகரன்.