
சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமான வரித்துறையின் சோதனை தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறினார். எல்லாவற்றையும் துணிச்சலாக சந்திப்போம் என்றும் கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து கொண்டிருந்த வேளையில் அப்போது செல்போன் அழைப்பு ஒன்று வந்தது.
தினகரன் செல்போனில் பேசும்போது, ஜெயா டிவி ஊழியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பேசினார். மேலும், ஜெயா டிவியில் சோதனை நடப்பது குறித்து ஒளிபரப்ப கூடாது என்றும் வருமான துறை அதிகாரிகள் கூறியதாககவும், இதனை ஜெயா டிவி ஊழியர் தினகரனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தினகரன், வருமான வரித்துறை சோதனை நடத்துவது குறித்து ஒளிபரப்பலாம் என்றும், எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிர்வாகி பச்சமுத்துவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டபோது, அது புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்றும் கூறினார். மேலும் பேசிய தினகரன், அப்படில்லாம் ஒன்னும் பண்ணிட முடியாது என்றார்.
வருமான வரித்துறை சோதனை குறித்து ஜெயா டிவியில் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக அது குறித்து பேசுவதற்கு தன்னுடைய வழக்கறிஞர்களை உடனே அனுப்பி வைப்பதாகவும் தினகரன் செல்போனில் பேசினார். இந்த பேச்சுக்குப் பிறகு டிடிவி தினகரன், மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.