
25 ஆண்டுகள் என்னை சிறையில் அடைத்தாலும் அரசியல் செய்வேன் என்றும், உள்ளே போனாலும், வெளியே வந்தாலும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி,டி,வி.தினகரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர்.பத்திரிக்கை மற்றும் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து தனது இல்லத்துக்குள் இருந்து வந்து செய்தியாளர்கடிள சந்தித்த டி.டி.வி.தினகரன், தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதுவிம் நடைபெறவில்லை என தெரிவித்தார். புதுச்சேரியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மட்டுமே சோதனை நடைபெற்று வருவதாகவும், அங்கு உர மூட்டைகளைத் தவிர எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு மத்திய அரசுதான் காரணம் என நேரடியாக அவர் குற்றம்சாட்டினார். சசிகலாவும், நானும் அரசியலில் இருக்கக் கூடாது என நினைப்பவர்கள்தான் வருமான வரித்துறையை ஏவிவிடுவதாகவும் தினகரன் தெரிவித்தார்.
ஏற்கனவே ஜெ.ஜெ.தொலைக்காட்சியை முடக்கியதுபோல் ஜெயா தொலைக்காட்சியையும் முடக்க நினைப்பவர்களின் வேலைதான் இது என அவர் குற்றம்சாட்டினார்.
என்னை மிரட்டிப் பார்க்க நினைக்கிறார்க்ள … ஆனால் வீரம் விளைந்த மண்ணில் பிறந்தவன் நான், எதையும் துணிச்சலுடன் சந்திப்பேன் என தினகரன் குறிப்பிட்டார்.
ஒரு கட்சியை அழித்துவிட்டு மற்றொரு கட்சி வளர முடியாது என தெரிவித்த டி.டி.வி.தினகரன், 25 ஆண்டுகள் என்னை சிறையில் அடைத்தாலும் அரசியல் செய்வேன் என்றும், உள்ளே போனாலும், வெளியே வந்தாலும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்றும் காட்டமாக தெரிவித்தார்.