
இது அம்மா அரசு என்றால் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் அவ்வாறு தீர்த்து இது அம்மா அரசுதான் என நிரூபிக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு மற்றும், ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கும் நாளை சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என தனபால் தெரிவித்தார்.
அதன்படி இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலையில் தொடங்கியது. அதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி பதில் நேரம் நடைபெற்று வருகிறது. இதில் முதன் முதலில் ஆர்.கே.நகர் சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இது அம்மா அரசு என்றால் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனவும் அவ்வாறு தீர்த்து இது அம்மா அரசுதான் என நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் போக்குவரத்துத்துறை நாளொன்றுக்கு ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்குவதாகவும் தெரிவித்தார்.
போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கில் இயக்கப்படுபவை அல்ல என்றும் போக்குவரத்து ஒரு சேவையே எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.