
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சட்டமன்றத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. வரும் 12ம் தேதி வரை சட்டமன்றம் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு சென்றுள்ள தினகரன், ஆளுநர் உரையை அலசி ஆராய்ந்து, அதில் உள்ள குறைகளையும் அதில் விடுபட்ட விஷயங்களையும் நேற்று லிஸ்ட் போட்டு அசத்தினார்.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில், முதன்முறையாக தினகரன் சட்டமன்றத்தில் பேசினார். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான ஊதிய உயர்வு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.