
ஒகி புயல் குறித்தும் மீனவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பதிலளித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு மற்றும், ஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கும் நாளை சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என தனபால் தெரிவித்தார்.
அதன்படி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
இதையடுத்து கேள்வி நேரத்தில் ஓகி புயல் பாதிப்பு குறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது, ஓகி புயலால் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க சரியான நடவடிக்கை இல்லை எனவும் எத்தனை மீனவர்கள் கரை திரும்பவில்லை என்ற விவரம் அரசிடம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும் மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிவாரணம் என்ன ஆனது என்றும் அவர் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒகி புயலின் போது மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் அனைத்து ஆட்சியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொலைத்தொடர்பு வசதி இல்லாததால் ஆழ்கடலுக்குச் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க முடியவில்லை எனவும் தனது உத்தரவுப்படி அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கன்னியாகுமரி விரைந்ததாகவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு முதற்கட்டமாக ரூ. 313 கோடியை நிவாரணமாக வழங்கியுள்ளது.