ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் யாருக்கெல்லாம் பங்கு போச்சு..? டிடிவி தினகரன் அடுக்கடுக்கான அதிரடி கேள்விகள்!

By Asianet TamilFirst Published Apr 28, 2020, 8:49 AM IST
Highlights

* அப்படியே டீலர் மூலமாக வாங்கவேண்டி வந்தாலும் விதிகளை மீறி, முகம் தெரியாத SHAN BIOTECH என்ற டீலரை அணுகியது யார்? - அவர்களை அரசுக்கு அறிமுகம் செய்தது யார்? -
* ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக சொல்லும் முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் அந்த சீன தயாரிப்பு நிறுவனத்தை அணுகி ஒரு கருவியின் அடக்க விலை எவ்வளவு என்று கேட்கும் அடிப்படை விஷயத்தை செய்தார்களா? -
* அப்படிக் கேட்டிருந்தால், வரிகள் இல்லாமல் 245 ரூபாய்க்கு வாங்கிய கருவிக்கு 355 ரூபாய் கூடுதல் லாபம் வைத்து விற்க முன்வந்த SHAN BIOTECH நிறுவனத்தை மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அனுமதித்தது ஏன்? -
 

ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூ.355 கூடுதலாகக் கொடுத்து வாங்கியதில், குறைந்தபட்ச லாபத் தொகை போக மீதிப்பணத்தில் யாருக்கெல்லாம் மறைமுகமாக பங்கு போனது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிமராமத்துக்கு நிதி ஒதுக்குவது தொடங்கி கொரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவது வரை பணம் சம்பாதிப்பது மட்டுமே பழனிசாமி அரசின் குறிக்கோள் - மக்கள் நலன் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை என்ற குற்றசாட்டுகள் பல நேரங்களில் முன் வைக்கப்பட்டிருக்கின்றன - அவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 24-ம் தேதி வழங்கியிருக்கும் ஒரு தீர்ப்பு அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஷ்கர் மாநில அரசு இந்த ரேபிட் டெஸ்ட் கருவியை 337 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது - இதுதொடர்பாக அதே நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தமிழக அரசு எவ்வளவு ரூபாய் கொடுத்து இந்தக் கருவிகளை வாங்கியது என்று கேட்டபோது, கடைசி வரை பதிலே சொல்லவில்லை - சுமார் ஒரு மணி நேரம் கழித்து சில ஆவணங்களை வெளியிட்டு ஒரு கருவியின் விலை 600 ரூபாய் மற்றும் 12 சதவீத ஜி.எஸ்.டி.யுடன், அதாவது 72 ரூபாய் என ஒரு கருவியை 672 ரூபாய்க்கு வாங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது -


இதையடுத்து கொரோனா சிகிச்சை தொடர்பாக தமிழக அரசு இதுவரை கொள்முதல் செய்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தொடர்பான விவரங்கள், அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடும்படி அடுத்த நாளே தான் அறிக்கை வெளியிட்டேன். ஆனால் அரசு அதற்கு பதில் அளிக்காமல் கள்ள மௌனம் சாதித்தது - அந்தக் கள்ளத்தனத்தின் பின்னணியைத்தான் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு இப்போது வெளியே கொண்டுவந்திருக்கிறது. ICMR என்று சொல்லப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தான் இதுபோன்ற மருத்துவ சோதனைக் கருவிகளை ஆய்வு செய்து, அதில் எவற்றை வாங்கலாம், என்ன விலைக்கு வாங்கலாம் என்று முடிவு செய்து அதை மாநில அரசுகளுக்கு அறிவுரையாகச் சொல்கிறது.
சீனாவின் WONDFO என்ற தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இக்கருவிகளை 245 ரூபாய் என்ற விலையில் டெல்லியைச் சேர்ந்த MATRIX LABS என்ற நிறுவனம்தான் இறக்குமதி செய்கிறது - இவர்களிடம் வாங்கிதான் RARE METABOLICS நிறுவனம் இந்தியா முழுக்க சப்ளை செய்தது. இந்த சூழலில், RARE METABOLICS மற்றும் MATRIC LABS ஆகிய நிறுவனங்களுக்கு இடையே சப்ளை தொடர்பாக மோதல் எழுந்ததை அடுத்து இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வந்தது - இவ்வழக்கு விசாரணையின்போது, இந்த விலை விவரங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ஒட்டுமொத்த நாடும் கொரோனா பாதிப்பின் அச்சத்தாலும், பீதியாலும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நேரத்தில் அதிகப்படியான சோதனைகளை குறைந்த விலையில் செய்ய வேண்டியது அவசியம் - 245 ரூபாய்க்கு வாங்கிய ஒரு கருவியை 600 ரூபாய்க்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல - மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்க முடியாது என்று சொல்லி ஒரு கருவியின் விலையை வரிகள் உட்பட 400 ரூபாய் என்று நிர்ணயம் செய்து மக்களின் மீது அக்கறையும் மனிதாபிமானமும் கொண்டு உத்தரவிட்டார் - இதை அந்த இரு நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையின்போது, 'MATRIC LABS' நிறுவனத்திடம் இக்கருவிகளை வாங்கி, இந்தியாவில் விநியோகிக்கும் உரிமை எங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு, SHAN BIOTECH என்ற டீலர் மூலமாக MATRIC LABS நிறுவனத்தை நேரடியாக அணுகி 600 ரூபாய் என்ற விலைக்கு 50 ஆயிரம் கருவிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது - ‘இது விதி மீறல்' என்ற ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தது RARE METABOLICS நிறுவனம். -
இப்போது பழனிசாமி அரசைப் பார்த்து கேட்க நினைக்கும் கேள்விகள் இவைதான் -
* ஒவ்வொரு முறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போதும் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்க சீனாவில் ஆர்டர் செய்திருக்கிறோம் - கப்பல் புறப்பட்டுவிட்டது - விமானம் புறப்பட்டுவிட்டது - விரைவில் வரும் - என்று பல நேரங்களில் முதலமைச்சர் பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் சொன்னார்களே அது பொய்தானே?
* அப்படியே டீலர் மூலமாக வாங்கவேண்டி வந்தாலும் விதிகளை மீறி, முகம் தெரியாத SHAN BIOTECH என்ற டீலரை அணுகியது யார்? - அவர்களை அரசுக்கு அறிமுகம் செய்தது யார்? -
* ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக சொல்லும் முதலமைச்சரும், சுகாதார அமைச்சரும் அந்த சீன தயாரிப்பு நிறுவனத்தை அணுகி ஒரு கருவியின் அடக்க விலை எவ்வளவு என்று கேட்கும் அடிப்படை விஷயத்தை செய்தார்களா? -
* அப்படிக் கேட்டிருந்தால், வரிகள் இல்லாமல் 245 ரூபாய்க்கு வாங்கிய கருவிக்கு 355 ரூபாய் கூடுதல் லாபம் வைத்து விற்க முன்வந்த SHAN BIOTECH நிறுவனத்தை மனசாட்சியை அடகுவைத்துவிட்டு அனுமதித்தது ஏன்? -
* மாண்புமிகு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கும் மனித நேயத்திலும், மக்களைப் பற்றிய அக்கறையிலும் ஒரு சிறு துளியாவது பழனிசாமி அரசுக்கு இருந்திருந்தால் SHAN BIOTECH நிறுவனத்திடம் ரேபிட் டெஸ்ட் கருவியின் விலையைக் குறைக்கச் சொல்லி பேச்சு நடத்தியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை? -
* ஒரு கருவிக்கு கூடுதலாக 355 ரூபாய் விலைவைத்து ஒரு பகல் கொள்ளையே நடந்திருக்கிறது. இதில் குறைந்தபட்ச லாபத் தொகை போக மீதிப்பணத்தில் யாருக்கெல்லாம் மறைமுகமாக பங்கு போனது? * கொரோனா ஊரடங்கு நேரத்தில் 20 முறைக்கும் மேலாக அதிகாரிகளை, அமைச்சர்களை அழைத்து கூட்டம் நடத்தினேன் என்று தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர் பழனிசாமி, ஒரு முறையாவது சுகாதார அமைச்சரை அழைத்து என்ன நடக்கிறது என்று கேட்டாரா? - அப்படிக் கேட்டிருந்தால், எல்லாம் தெரிந்திருந்தும் அதை அனுமதித்தது ஏன்? -


* இப்போது ரேபிட் டெஸ்ட் கருவியின் பயன்பாடே நிறுத்தப்பட்ட நிலையில், 50 ஆயிரம் கருவிகளுக்காக கொள்ளையடிப்பதற்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட 3 கோடியே 36 லட்சம் ரூபாயின் நிலை என்ன? 
* மேலும் நான்கு லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகச் சொன்னீர்களே... அதுவும் இந்த கொள்ளை விலை அடிப்படையில்தானா? -
* அப்படி அதே விலைக்குதான் என்றால், நீதிமன்றம் குறிப்பிட்ட 400 ரூபாய் என்ற விலையைத் தாண்டி, 4 லட்சம் கருவிகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் கொள்ளை நடக்க இருக்கிறதே அதற்கு என்ன பதில்? -
* கொரோனா ஊரடங்கின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் விழிபிதுங்கி, அடிப்படை உணவுக்கு கூட வழியின்றி தவித்துவரும் நேரத்தில், இப்படி ஒரு பகல் கொள்ளையை நடத்தத் துணிந்த மனசாட்சியற்ற பழனிசாமி அரசை நோக்கி இன்னும் ஏராளமான கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.
இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, இப்போதாவது தனது கள்ள மௌனத்தை இந்த அரசு கைவிட்டு, என்ன நடந்தது என்பது பற்றி முழுமையான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இதுவரை நடந்த மருத்துவ கருவிகள் உள்ளிட்ட அனைத்து கொள்முதல் விஷயங்களையும் பற்றி ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்து நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று அறிக்கையில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

click me!