ரேபிட் டெஸ் கிட் விவகாரம்... லாபத்தில் லாபம் வைத்து கொள்ளையடித்த இடைத்தரர்கள்... திருமாவளவன் சுளீர் கேள்வி!

By Asianet TamilFirst Published Apr 28, 2020, 8:27 AM IST
Highlights

சென்னையில் உள்ள மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனம் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை கருவி ஒன்று 245 ரூபாய் என்ற விலைக்குக் கொள்முதல் செய்துள்ளது. ஒரு கருவிக்கு 155 ரூபாய் கூடுதலாக வைத்து அதை 400 ரூபாய்க்கு ரியல் மெட்டபாலிக் மற்றும் ஆர்க் ஃபார்மசீயூடிகல்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு விற்றுள்ளது. அந்த இரண்டு கம்பெனிகளும் ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்துக்கு கருவி ஒன்று 600 ரூபாய் என்ற விலையில் விற்றுள்ளனர். 
 

சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 245 ரூபாய்க்கு வாங்கிய கருவியை 600 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் 18 கோடி ரூபாயை அபகரித்துள்ளனர். இது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முன்கூட்டியே தெரியாதா என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவிலிருந்து விரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) வாங்கியதில் இடைத்தரகர்கள் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருப்பது டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின் மூலமாக வெளிச்சத்துக்குத் தெரிய வந்துள்ளது. 5 லட்சம் கருவிகள் வாங்கியதில் சுமார் 18 கோடி ரூபாய் இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டி உள்ளனர். சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 245 ரூபாய்க்கு வாங்கிய கருவியை 600 ரூபாய்க்கு விற்று லாபம் பார்த்துள்ளனர். இது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முன்கூட்டியே தெரியாதா?


தெரிந்துதான் இந்த இடைத்தரகர்களிடத்தில் ஒப்பந்தம் போடப்பட்டதா? என்ற விவரங்களைய் தமிழக அரசு வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். சென்னையில் உள்ள மேட்ரிக்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனம் சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகளை கருவி ஒன்று 245 ரூபாய் என்ற விலைக்குக் கொள்முதல் செய்துள்ளது. ஒரு கருவிக்கு 155 ரூபாய் கூடுதலாக வைத்து அதை 400 ரூபாய்க்கு ரியல் மெட்டபாலிக் மற்றும் ஆர்க் ஃபார்மசீயூடிகல்ஸ் ஆகிய கம்பெனிகளுக்கு விற்றுள்ளது. அந்த இரண்டு கம்பெனிகளும் ஐ.சி.எம்.ஆர். நிறுவனத்துக்கு கருவி ஒன்று 600 ரூபாய் என்ற விலையில் விற்றுள்ளனர். 
அதாவது ஒவ்வொரு கருவிக்கும் 200 ரூபாய் அவர்கள் கூடுதலாக விலை வைத்துள்ளனர். இப்படி ஐந்து லட்சம் கருவிகள் 30 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இதில் 18 கோடி ரூபாயை இடைத்தரகர்கள் அபகரித்துள்ளனர். இந்த ஐந்து லட்சம் கருவிகளில் ஐம்பதாயிரம் கருவிகள் தமிழக அரசால் வாங்கப்பட்டவை. தமிழக அரசு சென்னையில் உள்ள ஷான் பயோடெக் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு கருவி ஒன்று 600 ரூபாய் என்ற விலையில் வாங்கி இருக்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கருவி ஒன்றை 400 ரூபாய்க்கு விற்ற மேட்ரிக்ஸ் லேப்ஸ் நிறுவனமும் சென்னையில்தான் உள்ளது. தமிழக அரசு மேட்ரிக்ஸ் நிறுவனத்தோடு நேரடியாக ஒப்பந்தம் செய்து இருந்தால் குறைந்தபட்சம் கருவி ஒன்றை 400 ரூபாய்க்கு வாங்கியிருக்க முடியும்.


ஆனால், ஷான் பயோடெக் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ததால் கருவி ஒன்றுக்கு 200 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டியதாகியிருக்கிறது. இது எதனால் நடந்தது? என்பதை தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மக்களின் உயிர்காக்கும் கருவிகளை வாங்குகிற விஷயத்திலேயே இவ்வளவு கொள்ளை லாபம் ஈட்ட இடைத்தரகர்கள் முயற்சி செய்துள்ளனர். எனவே மத்திய அரசு இந்த நிறுவனங்களிடம் கொள்முதல் செய்வதை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி மோசமான வணிக நடைமுறையைப் பின்பற்றிய இந்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் வைத்து குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு இந்த நிறுவனங்கள் இத்தகைய கருவிகளை இறக்குமதி செய்வதிலிருந்து தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இனி இத்தகைய கருவிகளைக் கொள்முதல் செய்வதை ஐ.சி.எம்.ஆர் பொறுப்பில் விடாமல் இதற்கென ஒரு குழுவை அமைத்து அந்த குழுவே நேரடியாக அயல்நாடுகளில் இருந்து கருவிகளை தருவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த ஒப்பந்தங்கள் யாவும் வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று அறிக்கையில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

click me!