டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் கிடையாது... உச்சநீதிமன்றத்தில் அதிரடி!

By vinoth kumarFirst Published Jan 24, 2019, 11:02 AM IST
Highlights

டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம்  உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம்  உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் டி.டி.வி.தினகரன். இதனைத் தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்துவதற்காக இந்த சின்னத்தை தனது கட்சிக்கு நிரந்தரமாக ஒதுக்கும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், கே.எம்.ஜோசப் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.டி.வி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ’இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. அதில் எங்களுக்கு நிரந்தரமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க வலியுறுத்தி வருகிறோம்’ என வாதிட்டார். 

ஆனால், ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மத்திய அரசு முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குக்கர் சின்னம் தான் வேண்டும் என்றால், தேர்தல் தேதி அறிவித்த பிறகு அவர்கள் போட்டியிடும் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தான் சென்று முறையிட வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தேவையற்றது என அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னத்தையே எதிர்வரும் அனைத்து தேர்தலுக்கும் ஒதுக்கீடு செய்ய முடியுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று  ஆஜரான தலைமை தேர்தல் அதிகாரி ‘’டி.டி.வி.தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது. குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால் தர முடியாது’’ என திட்டவட்டமாக தெரிவித்தார். ’’அமமுக அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அமமுகவுக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும்’’ எனவும் அவர் பதிலளித்துள்ளார். 

click me!