தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடமில்லை..! செங்கோட்டையன், தம்பிதுரை கடும் அதிருப்தி!!

By Selva KathirFirst Published Jan 24, 2019, 9:45 AM IST
Highlights

அ.தி.மு.கவின் தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம் அளிக்கப்படாத காரணத்தினால் செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அ.தி.மு.கவின் தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம் அளிக்கப்படாத காரணத்தினால் செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஜெயலலிதா இருக்கும் போது இருந்தே அ.தி.மு.கவிற்காக கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பவர் செங்கோட்டையன். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அ.தி.மு.கவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்டது. அந்த வெற்றிக்கு காரணம் அ.தி.மு.கவின் வலுவான கூட்டணி. அதாவது தே.மு.தி.கவுடன் 2011ம் ஆண்டு அ.தி.மு.க வைத்த கூட்டணி தான் அந்த கட்சியை உச்சாணிக் கொம்பில் ஏற்றியது. இந்த கூட்டணிக்கு மிக முக்கிய சூத்திர தாரிகளில் மிக முக்கியமானவர் செங்கோட்டையன். 

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை வீட்டுக்கே சென்று சந்தித்து கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைத்தவர் செங்கோட்டையன். பிறகு ஓ.பி.எஸ் பிரேமலதாவிடம் கெஞ்சி கூத்தாடி 41 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார். 2011 தேர்தலில் அ.தி.மு.கவிற்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்தார். இதன் பின்னணியில் செங்கோட்டையனின் பணி அளப்பறியது. 

இப்படி கூட்டணி விவகாரத்தில் கில்லியான செங்கோட்டையனுக்கு தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம் அளிக்கப்படவில்லை. அதே போல் தம்பிதுரைக்கும் தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம் இல்லை. மாறாக தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பு குழுவில் தம்பிதுரை மற்றும் செங்கோட்டையன் பெயர்கள் உள்ளன. தொகுதிப் பங்கீட்டு குழுவை ஒப்பிடுகையில் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பு குழுவை செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

தங்களை ஓரம்கட்டிவிட்டு கட்சியின் ஜூனியர்களான தங்கமணி மற்றும் வேலுமணிக்கு தொகுதிப் பங்கீட்டில் இடம் அளிக்கப்பட்டுள்ளது செங்கோட்டையன் மற்றும் தம்பிதுரையை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டெல்லியில் அ.தி.மு.கவின் பிரதிநிதி போல் தம்பிதுரை தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார். அதே போல் அ.தி.மு.க கூட்டணி விவகாரம் குறித்தும் தனது விருப்பம் போல் தம்பிதுரை கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் இருந்து தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டுள்ளார். இதனால் கூட்டணி தொடர்பாக தம்பிதுரை பேசும் அனைத்து கருத்துகளும் பயனற்றதாகவும், அதிகாரப்பூர்வம் இல்லாததாகவும் ஆகும் நிலை உருவாகியுள்ளது.

click me!