
தேர்தல் விதிகளுக்கு முரணாக ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் அணி பண பட்டுவாடா செய்வதாக ஒ.பி.எஸ் அணியினர் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆர்.கே நகரில் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரனும் அதிமுக புரட்சிதலைவி அம்மா சார்பில் மதுசூதனனும், பாஜக சார்பில் கங்கை அமரனும், திமுக சார்பில் மருதுகணேஷும் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
ஆளுங்கட்சியான தினகரன் தரப்பில் பண பட்டுவாடா தலைவிரித்து ஆடுவதாக புகார்கள் தேர்தல் ஆணையத்தில் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3 ஷிப்ட் கணக்கில் பறக்கும் படை அமைத்து தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.
ஆனாலும் பணபட்டுவாடா குறைந்த பாடில்லை என்று புகார்கள் வலுத்து வருகிறது.
அதன்படி தேர்தல் விதிகளுக்கு முரணாக ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் அணி பண பட்டுவாடா செய்வதாக ஒ.பி.எஸ் அணியினர் தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் இருந்து எடுத்து வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாடியுள்ளனர்.