
ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருது கணேஷ், திமுகவின் சாதாரண தொண்டர் என்பதால், அவரிடம் பெரிய அளவில் பொருளாதார பின்னணி இல்லை.
அதனால், தேர்தல் பிரச்சாரம் செய்வது போல் ஆங்காங்கு நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும், திமுகவின் முக்கிய புள்ளிகள், தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிய அளவில் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்.கே.நகரில் சீட்டு கேட்ட அனைவருமே, எவ்வளவு பணம் செல்வு செய்ய முடியும் என்பதை பற்றியே பேசினார்.
ஆனால், தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகள், அங்குள்ள மக்களின் நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகக் கூறியவர் மருது கணேஷ் மட்டுமே.
அதன் காரணமாகவே, அவருக்கு சீட் வழங்கப்பட்டது. மேலும், அவருக்கான செலவை தாமே செய்வதாக, மாவட்ட செயலாளர் சுதர்சனம் ஒத்து கொண்டதும் மற்றொரு காரணமாகும்.
ஒரு சாதாரண தொண்டன் என்ற நிலையிலேயே, தொகுதியில் சந்து பொந்து விடாமல் அனைத்து வீடுகளுக்கும் சென்று அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
பல இடங்களில், கட்சிக்காரர்கள் மத்தியிலும், வீடுகளிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல், அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் அவருடன் மனப்பூர்வமாக பணியாற்றி வருகின்றனர்.
ஆனாலும் பணத்தையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் சில முக்கிய திமுக புள்ளிகள், அவருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காமல் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனாலும், ஆங்காங்கே நின்று பிரச்சாரம் செய்வதுபோல், போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு உடனே அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதாகவும் தலைமைக்கு தகவல் வந்துள்ளது.
எனினும், உதயசூரியன் சின்னம் மிகப்பெரும் பலமாக உள்ளது. நம் வாக்குகள் அப்படியே நமக்கு விழும். அ.தி.மு.க வாக்குகள் மூன்று அணிக்கும் பிரிகின்றன.
எனவே வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் கொஞ்சமும் அயராமல் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார் மருது கணேஷ்.