
ஆர்.கே.நகரில் தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடா செய்யும் காட்சிகள் வீடியோ ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதை கண்டு வெறுத்துப் போன தேர்தல் ஆணையம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி போலவே, ஆர்.கே.நகரிலும் தேர்தலை நிறுத்துவது குறித்து, தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவுகள் பிறப்பித்திருந்தாலும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையிலேயே தினகரன் அணியினர் பண பட்டுவாடா செய்து வருகின்றனர்.
இதை தடுக்க முயன்ற திமுகவினருக்கும்-தினகரன் அணியினருக்கும் இடையே ஆங்காங்கே முட்டல் மோதல்கள் ஏற்பட்டு கத்திக் குத்து வரை சென்றுள்ளது.
நேற்று இரவு மட்டும் விடிய, விடிய ஒரு வாக்குக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம், 60 கோடி ரூபாய் அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை, வெற்றி மட்டுமே நமது இலக்கு என்று கூறும் தினகரன் சார்பில், ஆர்.கே.நகரில் இதுவரை 128 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், வெறுத்துப் போன திமுக, ஓ.பி.எஸ் அணி, தீபா பேரவை, பாஜக, சி.பி.எம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும், ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளன.
அதில், தினகரன் தரப்பினர் பணப்பட்டுவாடா செய்வது, அதை தடுக்க முயன்ற எதிர் கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஆர்.கே.நகரில் திரும்பும் திசை எல்லாம் உலாவரும், விலை உயர்ந்த கொலுசு கார்கள், அதில் இருந்தது இறங்கி கரை வேட்டியுடன் வலம் வரும் தினகரன் ஆதரவாளர்கள் வாரி இறைக்கும் பணம்.
போலீசார் முன்னிலையிலேயே, தினகரன் தரப்பினர் காமாட்சி விளக்குகளை விநியோகித்த காட்சிகள் என அனைத்தும், வீடியோ வடிவில் தேர்தல் ஆணையம் சென்று சேர்ந்துள்ளது.
தி.மு.க., தரப்பு எம்.பி க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை நேரில் சந்தித்து, வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்துள்ளனர்.
ஏற்கனவே, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் ஆகியோரிடம், தேர்தல் விதிமுறைகள் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
அதன் பின்னரும், தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதற்கான ஆதாரங்கள், ஒப்படைக்கப் பட்டுள்ளன.
எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக வும் ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்துவதற்கு ஆர்வம் காட்டி வருவதால், தேர்தல் நிறுத்த அறிவிப்பு விரைவில் வரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.