நாங்கள் இருவரும் இணைந்தது சுயநலத்திற்காக அல்ல, முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக ஒன்றினையவில்லை. துரோகிகள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கொடாநாடு வழக்கு- ஓபிஎஸ்- டிடிவி போராட்டம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நடைபெற்ற போராட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தோடு இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், தேனியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் இந்த இடத்தில் தான் முதன்முதலில் என்னை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார். ஓபிஎஸ் அறிவித்த ஆர்பாட்டத்திற்கு ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களாகிய நாங்கள் அழைக்காமலே பங்கேற்போம் என அறிவித்தோம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை இன்று துரோகத்தால், ஒருசிலர் அபகரித்திருக்கிறார்கள்.
பதவி மேல் ஆசை இல்லை
நாங்கள் இருவரும் இணைந்தது சுயநலத்திற்காக அல்ல, முதலமைச்சராக வர வேண்டும் என்பதற்காக ஒன்றினையவில்லை. துரோகிகள் கையில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டு தொண்டர்களிடம் ஒப்படைக்கவே ஒன்றிணைந்துள்ளோம். 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பி.எஸ். அவருக்கு பதவி மீது ஆசை இல்லை. எனக்கும் பதவி மேல் ஆசை இல்லை. கோடநாடு கொலை, கொள்ளைக்கு யார் என்று உங்களுக்கு தெரியும். தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்து 90 நாட்களுக்குள் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாகக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார் .
கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என கூறியும் அவர்களை பிடிப்பதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் ஓ.பி.எஸ் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் குற்றவாளிகளை கைது செய்ய மறந்துவிட்டார்.
அச்சாணி முறிந்து போனவர்கள்
அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள்; இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை... டெண்டர் படைதான் அங்கே இருக்கிறது. அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பவர்கள், அச்சாணியை பற்றி பேசுகிறார்கள். ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி விசுவாசமிக்க தொண்டர்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.
விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது. ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள். அச்சாணி முறிந்து போனவர்கள், டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள். எங்களுக்கு டெண்டர் ஆசையில்லை, சந்திலே சிந்து பாட ஆசையில்லையென டிடிவி தினகரன் ஆவேசமாக பேசினார்.
இதையும் படியுங்கள்
ஓ.பி.எஸ்-டிடிவி கூட்டணி என்பது அச்சாணி இல்லாத வண்டி... அது மூன்றடி கூட ஓடாது - ஜெயக்குமார் கிண்டல்