கொடநாடு கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி ஓபிஎஸ் அணி சார்பாக சென்னையில் நடைபெற்ற போராட்டத்திற்கு குட்டியானை வாகனத்தில் சுமார் 40 பேரை நெருக்கி நிற்க வைத்து அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் கொடநாடு போராட்டம்
அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போராட்டத்தை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் அமமுகவும் பங்கு பெறும் என அறிவித்த அக்கட்சியின் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் கோடநாடு கொலை கொள்ளை முறையாக விரைந்து விசாரிக்காத தமிழக அரசை கண்டித்து ஓ.பி.எஸ் அணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து தொண்டர்களை நிர்வாகிகள் அழைத்து வந்தனர்.
குட்டியானையில் தொண்டர்கள்
வடசென்னை பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட தொண்டர்கள் "குட்டி யானை" மினி ட்ரக்கில் ஆடு மாடுகளை அழைத்து வருவதை போல அழைத்துவரப்பட்ட காட்சி, காண்போரை பரிதாபப்படவைத்தது. 15 இருந்து 20 பேர் வரை பயணம் செய்யக்கூடிய வாகனத்தில், 40 பேரை நெருக்கி நிற்க வைத்து அழைத்து வந்தனர்.போராட்டத்திற்கு வாடகை பஸ் அல்லது வேனில் அழைத்து வருவதற்கு பதிலாக குட்டியானையில் அடைத்து அழைத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டால் பணம் கொடுப்பார்கள் என்பதால் வயது முதிர்ந்த பெண்களும் அவ்வளவு நெருக்கடியிலும் அந்த வாகனத்தில் பயணம் செய்து வந்தனர். இது போன்று கூட்டமாக அழைத்து வருவதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்