அதிமுக தோற்றால் டி.டி.வி.தினகரன் தான் காரணம்... ஆடிப்போய்க் கிடக்கும் அதிமுக நிர்வாகிகள்..!

By Thiraviaraj RMFirst Published May 22, 2019, 6:10 PM IST
Highlights

இரு அணிகளும் பிரிந்து கிடப்பதால் இப்போது அதிமுக ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக அந்த நிலை ஏற்பட்டால் அது டி.டி.வி.தினகரன் மட்டுமே காரணம் என அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கலங்கிப்போய்க் கிடக்கிறார்கள்.  

தமிகழத்தில் அதிமுகவை அதிக செல்வாக்குள்ள பலமான கட்சியாக தன் கைக்குள் வைத்திருந்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கட்சி நிர்வாகிகளை தனது கண்ணசைவில் வைத்து அதிக வாக்கு வங்கி பெருக்கிக் கொண்டே வந்த அதிமுக தற்போது பல அணிகளாக மாறி தனது பலத்தை இழந்து ஆட்சியை பரிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

 

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கில் 40.8 சதவிகிதம் வாக்கு வங்கியை அதிமுக வைத்திருந்தது. திமுக 31. 6 சத விகித வாக்கு வங்கியை மட்டுமே பெற்றிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவுக்கு தொண்டர்கள் அதிகம். ஆகையால் திமுக அதிமுகவை தோற்கடிக்க பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் காய் நகர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தது. 

அதனால் தான் கடந்த மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து களமிறங்கி வெற்றி பெற்றார் ஜெயலலிதா. அதெல்லாம், அவர் மறைவுக்கு பிறகு தலைகீழாக மாறிப்போய் விட்டது. காரணம் ஜெயலலிதாவின் மறைவு மட்டுமல்ல டி.டி.வி.தினகரன் தான் முக்கிய காரணம். பலமாக இருந்த அதிமுக இரண்டாக பிரிந்து போனதால், இரு கட்சிகளாக தேர்தலில் களமிறங்கி உள்ளதால் எதிரணியான திமுகவுக்கு சாதகமாகி விட்டது. அதிமுக தொண்டர்கள், டி.டி.வி.தினகரன் பக்கமும், அதிமுக பக்கமும் பிரிந்து கிடப்பது வீடு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்கிற கதையாகி திமுகவுக்கு சாதகமாகி விட்டது. 

அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் போட்டி வேட்பாளர்களை களமிறக்கி விட்டார் டி.டி.வி.தினகரன். திமுக வென்றாலும் பரவாயில்லை. எடப்பாடி அணி வெற்றி பெறக்கூடாது என்கிற மனநிலையில் செயல்பட்டு வந்தார் டி.டி.வி.தினகரன். ஆகையால் தான் அதிமுக கோட்டையான சில தொகுதிகளில் கூட ஓட்டை விழும் என கருத்துக் கணிப்புகள் முடிவுகள் கூறுகின்றன. 

டி.டி.வி.தினகரன் பெறும் வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்று தனது பலத்தை நிரூபிப்பதற்காக இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கி விட்டார். ஆனால் அவரது வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவுக்கு விழவேண்டிய வாக்குகள். டி.டி.வி.தினகரன் அணியும் எடப்பாடி அணியும் இணைந்திருந்தால் நிச்சயம் திமுகவுக்கு ஜெயலலிதா இல்லாத நிலையும் பெரும்பான்மை வெற்றியை அதிமுக பெற்றிருக்கும். இரு அணிகளும் பிரிந்து கிடப்பதால் இப்போது அதிமுக ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

ஆக அந்த நிலை ஏற்பட்டால் அது டி.டி.வி.தினகரன் மட்டுமே காரணம் என அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கலங்கிப்போய்க் கிடக்கிறார்கள்.  

click me!