தொகுதிக்கு 20 ஆயிரம் ஓட்டுகளை டிடிவி தினகரன் பிரிக்கப் போறாரே... என்ன செய்ய போறீங்க.? அதிமுக எம்எல்ஏ ஆதங்கம்!

By Asianet TamilFirst Published Mar 25, 2021, 9:38 PM IST
Highlights

டிடிவி தினகரனின் அமமுகவால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என்று அதிமுக எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 
 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது தினகரன் அணியில் இருந்தவர் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி. 2019-இல் ரத்தின சபாபதியின் எம்.எல்.ஏ. பதவியை தகுதி நீக்கம் செய்ய அதிமுக அரசு முயற்சி மேற்கொண்டது. உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால், அவருடைய எம்.எல்.ஏ. பதவி தப்பியது. பின்னர் 22 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பிறகு, அதிமுகவுடன் ரத்தின சபாபதி இணைந்து பயணிக்கத் தொடங்கினார்.
இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அறந்தாங்கியில் போட்டியிட ரத்தின சபாபதி மீண்டும் வாய்ப்பு கேட்டார். ஆனால், அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதிருப்தியில் இருந்த ரத்தின சபாபதிக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியை அதிமுக தலைமை வழங்கியது. ஆனால், கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, இன்று அதற்கான கடிதத்தை வெளியிட்டார் அவர். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவில் தொண்டராக இருக்கவே விரும்புகிறேன். எனவேதான், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.  
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்தவர்கள் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வாக்குகளை அமமுக பிரிக்கப் போகிறது. எனவே, அதிமுக பின்னடைவை சந்தித்துவருகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக -அமமுக இணைந்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது.  நான் சொன்னதை அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் செவிமடுக்கவில்லை. எல்லோரும் இணைய வேண்டும் என்பதில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவும் உடன்பட்டதாக அறிந்தேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட இந்த இயக்கம் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்குமோ என்ற வருத்தம் உள்ளது. இதைத் தடுக்க நான் முன்கூட்டியே கூறியதை ஏற்கவில்லையே என்ற ஆதங்கமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. இணைய வேண்டும் என்று  நான் சொன்ன ஒரே காரணத்துக்காக அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. அதிமுக, அமமுகவை இணைக்க மீண்டும் முயற்சி செய்வேன். அதே வேளையில், அதிமுகவில் உள்ள விஷச்செடிகளை அகற்ற கடுமையாக உழைப்பேன்.
தோல்வி பயத்தால்தான் தற்போது அமமுகவை அதிமுகவோடு இணைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளன. எனவே, இவர்கள் போடும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு வருவார்களா என்று கூற முடியாது. அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அமமுக இணைவது அவசியம்.” என்று ரத்தின சபாபதி  தெரிவித்தார்.

click me!